நியூயார்க், செப்டம்பர் 29 – உலக அளவில் நடைபெற்று வரும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரிக்ஸ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் கூட்டம் சமீபத்தில் நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த கூட்டமைப்பில் பயங்கரவாத அமைப்புகளில் தங்கள் நாட்டினர் சேர்வதைத் தடுப்பது, அவர்களது நிதி ஆதாரங்களை அழிப்பது உள்ளிட்டவற்றில் ஏற்பட இருக்கும் மாற்றங்கள் பற்றியும், அதற்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பு பற்றியும் விவாதிக்கப்பட்டது. இறுதியில் உலக நாடுகள் இந்த விவகாரத்தில் பிரிக்ஸ் நாடுகளுக்கு ஒத்துழைப்ப்பு அளிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த கூட்டம் பற்றி பிரிக்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“உலக அளவில் நடைபெற்று வரும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உலக நாடுகள் முனைப்பு காட்டவேண்டும். பயங்கரவாதம் ஒரு உலகளாவிய பிரச்சனையாக வளர்ந்து வருகின்றது” என்று கூறியுள்ளது.
மேலும், பயங்கரவாதம் தவிர, இஸ்ரேல் – பாலஸ்தீன அமைதி ஒப்பந்தம், காஸா நிலவரம், ஆப்கானிஸ்தான் அரசியல் சூழல், உக்ரைன் பிரச்னை, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா நோய் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.