Home இந்தியா வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாழ்நாள் விசா –  நரேந்திர மோடி அறிவிப்பு!

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாழ்நாள் விசா –  நரேந்திர மோடி அறிவிப்பு!

521
0
SHARE
Ad

MODIமன்ஹாட்டன், செப்டம்பர் 30 – வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாழ்நாள் விசா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ள நரேந்திர மோடி, மன்ஹாட்டன் நகரின் மேடிசன் பூங்கா சதுக்கத்தில், கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

30-க்கும் மேற்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுமார் 20,000 அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் மோடியின் பேச்சு அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

#TamilSchoolmychoice

இந்த நிகழ்ச்சியில் நரேந்திர மோடி கூறியதாவது: “இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நாள் முதல் தொடர்ச்சியாகப் பதினைந்து நிமிடங்களுக்குக் கூட ஓய்வு  எடுக்க முடியாமல், பணியாற்றி வருகிறேன். எனது அரசு மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வீணடிக்க மாட்டேன்”.

“100 சதவீத மக்கள் நல அரசிற்காகவே நாங்கள் செயல்படுவோம். 2022-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும், சொந்தமாக ஒரு வீடு இருக்கும் நிலைமையை உருவாக்குவதே எனது கனவாகும். 21-ஆம் நூற்றாண்டில் உலக நாடுகளையெல்லாம் முன்னெடுத்துச் செல்ல இந்தியா தயாராகி வருகின்றது.”

நம் தேசத்தை நாம் முன்னெடுத்துச் செல்லுவோம். வெளிநாடு வாழ் இந்தியர்களை எக்காரணம் கொண்டும் நான் கைவிடமாட்டேன். தற்போது நடைமுறையில் உள்ள இந்திய வம்சாவளியினருக்கான அடையாள அட்டை (பி.ஓ.எஸ்.) திட்டம் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (ஓ.சி.ஐ) திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு, பி.ஓ.எஸ். அடையாள அட்டைதாரர்கள் இந்தியா வருவதற்கான வாழ்நாள் விசா வழங்கப்படும்.”

“அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கு நீண்ட நாள் விசா வழங்கப்படும். இந்த விசாவில் தங்கியிருப்போர் இனி தங்களைப் பற்றிய விவரங்களை இந்திய காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டியதில்லை.

இந்தியா வந்தடையும் அமெரிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு உடனடியாக விசா வழங்குவதுடன் நீண்ட நாள் சுற்றுலா விசா வசதியும் அளிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே அமெரிக்கா சென்ற நரேந்திர மோடி, அங்குள்ள இந்தியர்களிடம் எளிதாக பழகியதும், அவரின் தொலைநோக்கான அணுகு முறையும், பாதுகாப்பு வளையத்தையும் மீறி இந்தியர்களை சந்தித்த துணிச்சலும், உணர்ச்சி மிக்க அவரின் பேச்சுக்களும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் அவரின் மதிப்பை பன்மடங்கு உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.