கோலாலம்பூர், நவம்பர் 6 – ஆசியாவில் மிகவும் மலிவான விலையில் பயணிகளுக்கு விமான சேவையினை வழங்கி வரும் ஏர் ஏசியா நிறுவனம், இன்டர்போல் காவல் துறையுடன் இணைந்து பாதுகாப்புத் திட்டமான ‘டேர்ன் பேக் க்ரைம்’ (Turn Back Crime) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.
இதற்காக தனது ஏர்பஸ் ஏ320 விமானத்தின் வெளிப்புறத்தில் டேர்ன் பேக் க்ரைம் என்ற வாசகங்களை பிரத்யேகமாக வடிவமைத்துள்ளது.
இன்டர்போல் காவல் துறையின் டேர்ன் பேக் க்ரைம் திட்டத்தின் முக்கிய நோக்கம், அனைத்து தனியார் மற்றும் பொது துறைகளை ஒன்றிணைத்து, உலக அளவில் பெருகி வரும் குற்றச்செயல்கள் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை ஒழித்து, பாதுகாப்பை மேம்படுத்துவதாகும்.
இது தொடர்பாக ஏர் ஏசியா குழுமத்தின் தலைமை நிர்வாகி டன்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் கூறுகையில், “எங்கள் நிறுவனம், பாதுகாப்பை வலியுறுத்தும், டேர்ன் பேக் க்ரைம் திட்டத்தை பிரச்சாரம் செய்வதில் பெருமை அடைகிறேன். இதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பிற்கு எங்கள் நிறுவனம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது தெரியவருகின்றது.”
“இன்டர்போலின் ‘ஐ-செக்கிட்’ (I-Checkit) பாஸ்போர்ட் பரிசோதனைத் திட்டத்தை ஏர் ஏசியா தான் முதன் முதலில் செயல்படுத்தியது. இதன் மூலம், போலி பாஸ்போர்ட் பிரயோகிப்பது தடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
டேர்ன் பேக் க்ரைம் வாசகங்களுடன் உள்ள ஏர் ஏசியாவின் ஏர்பஸ் ஏ320 விமானம், சுமார் 23 நாடுகளுக்கு பயணிக்க இருப்பதால், பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்ற நிறுவனங்களுக்கும் ஏற்படும் என இன்டர்போல் அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.