Home இந்தியா என்.சி.டி.சி.க்கு மம்தா ஆதரவு: ஷிண்டே தகவல்

என்.சி.டி.சி.க்கு மம்தா ஆதரவு: ஷிண்டே தகவல்

684
0
SHARE
Ad

shindeகொல்கத்தா, பிப்.26- தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் (என்.சி.டி.சி.) அமைக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவாக உள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே திங்கள்கிழமை கூறியிருக்கிறார்.

என்.சி.டி.சி. அமைப்பதற்கு பல மாநிலங்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கு விவகாரம் மாநிலங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் மத்திய அரசு கொண்டு வர இருக்கும் என்.சி.டி.சி. அமைப்பு மாநில அரசின் அதிகாரத்தில் குறுக்கிடுவதாகும் என்றும் மாநிலங்கள் கூறிவருகின்றன.

இந்நிலையில் ஹைதராபாத் இரட்டை வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு என்.சி.டி.சி. அமைப்பது குறித்து மீண்டும் பேச்சு எழுந்துள்ளது. மாநிலங்களவையில் அதனை வலியுறுத்தி ஷிண்டே பேசினார்.

#TamilSchoolmychoice

தற்போது ஷிண்டே மேற்கு வங்கம் வந்துள்ளார். கொல்கத்தாவில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, என்.சி.டி.சி. பற்றி மம்தாவிடம் பேசினீர்களா என்று கேட்டனர். அப்போது அவர் கூறியது:-

தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜியிடம் பேசினேன். என்.சி.டி.சி. அமைக்கும் விஷயத்தில் இப்போது அவர் ஆதரவான நிலைப்பாடு கொண்டிருக்கிறார். இதுபோன்ற மையம் அமைப்பதில் அவருக்கு முன்பு எதிர்ப்பு இருந்தபோதிலும் நான் அவரிடம் இது பற்றிப் பேசியிருக்கிறேன்.

என்.சி.டி.சி அமைப்பது குறித்து மத்திய அரசு தீவிரம் காட்டும். தேசத்தின் பாதுகாப்பு விஷயத்தில் மம்தா பானர்ஜி எப்போதும் ஒத்துழைப்பு அளித்து வருகிறார் என்று கூறினார்.

மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் பிரதீப் பட்டாசார்யா புகார் கூறிவருவது பற்றி ஷிண்டே செய்தியாளர்கள் கேட்டபோது, சட்டம், ஒழுங்கு என்பது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அதனால் இந்த விஷயத்தில் நான் எதுவும் கூற விரும்பவில்லை என்றார் அவர். மாநில அரசு கேட்டுக் கொண்டபடி, ஜங்கல்மஹல் பகுதியில் நிறுத்தியிருக்கும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் டார்ஜீலிங் பகுதிக்கு அனுப்பப்படுவர். ஜங்கல்மஹல் பகுதியில் இப்போது அமைதி நிலவுகிறது. டார்ஜீலிங்கில் பதற்றமான சூழல் உருவாகிவருகிறது என்பதால் நிலைமையை சீராக்க மத்திய ரிசர்வ் படையினர் அங்கு செல்கின்றனர்.

மேற்கு வங்கத்தில் விரைவில் நடக்கவுள்ள பஞ்சாயத்து தேர்தலின்போது மத்திய காவல் படையினரை ஈடுபடுத்த வேண்டும் என்று மாநில அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வேண்டுகோளை மத்திய அரசு ஏற்கும் என்றார்.

முன்னதாக, முதல்வர் மம்தாவை ஷிண்டே சந்தித்துப் பேசினார். ஒரு மணி நேரம் நீண்ட அந்த சந்திப்பின்போது கடலோர பாதுகாப்பு குறித்து விவாதித்தனர். பின்னர் இருவரும் ஜம்புத்வீப் பகுதிக்கு ஹோவர்கிராஃப்ட் படகில் சென்று பார்வையிட்டனர்.