கோல்கட்டா, பிப்.26- உள்நாட்டில் தேயிலை உற்பத்தி, கடந்த எட்டு ஆண்டுகளில் (2005-2012), 17 சதவீதம் வளர்ச்சி கண்டு, 94.60 கோடி கிலோவிலிருந்து, 111.20 கோடி கிலோவாக அதிகரித்து உள்ளது என, இந்திய தேயிலை கூட்டமைப்பு (ஐ.டி.ஏ.,) தெரிவித்துஉள்ளது. இதே காலத்தில், நாட்டின் தேயிலை பயன்பாடு, 76 கோடி கிலோவிலிருந்து, 89.50 கோடி கிலோவாக வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டில், 19.90 கோடி கிலோவாக இருந்த, இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி, சென்ற 2012ம் ஆண்டில், 19.50 கோடி கிலோவாக குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில், இதன் ஏற்றுமதி முறையே, 22.20 கோடி கிலோ மற்றும் 21.20 கோடி கிலோ என்ற அளவில் சற்று அதிகரித்து காணப்பட்டது.
உற்பத்தி குறைவு மற்றும் உள்நாட்டில் தேயிலை பயன்பாடு உயர்ந்தது போன்றவற்றால், சென்ற 2012ம் ஆண்டில், இதன் ஏற்றுமதி குறைந்து போயுள்ளது.நாட்டின் தேயிலை இறக்குமதி, கடந்த ஏழு ஆண்டுகளில், 1.70 கோடி கிலோவிலிருந்து, 1.90 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது.சென்ற 2012ம் ஆண்டில், ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பயன்பாடு போக,தேயிலை உபரி கையிருப்பு, 4.10 கோடி கிலோ என்ற அளவில் உள்ளது. இது, கடந்த 2005ம் ஆண்டில், 40 லட்சம் கிலோ என்ற அளவில் இருந்தது.
உள்நாட்டில், தேயிலை பயன்பாடு, ஆண்டுக்கு 3-4 சதவீதம் என்ற அளவில், சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. இதையடுத்து, கடந்த ஏழு ஆண்டு களில், இதன் சராசரி விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, ஒரு கிலோ தேயிலை விலை, கடந்த 2005ம் ஆண்டில், 58.67 ரூபாயாகவும், 2011ம் ஆண்டில், 104.06 ரூபாயாகவும், சென்ற 2012ம் ஆண்டில், 121.82 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.