சென்னை, நவம்பர் 12 – காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. அவைத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் மகள் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று நடந்தது.
காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன் அனைவரையும் வரவேற்றார். இந்த திருமணத்தை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது:–
“தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் சுந்தர் மகள் பொற்செல்வி– ராஜராஜன் திருமணத்தை நடத்தி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தி.மு.க.வுக்கு என்றைக்கும் கலைஞர்தான் நிரந்தர தலைவர். ஆட்சி பொறுப்புக்கு வந்தாலும் தலைவர் கலைஞர்தான் முதலமைச்சர்”.
“எல்லோரும் இதே கருத்தை தான் பேசுகிறோம். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அரசியல் ஆதாயத்துக்காக எனது அறிக்கையை கொச்சைப்படுத்தி பேசியதால் தான் அதற்கு விளக்கம் தெரிவித்தேன். புதிய முதலமைச்சராக இன்று ஆட்சி நடத்தும் ஓ.பன்னீர்செல்வம் அறையில் கூட அவரது படம் இல்லை”.
“அறை வாசலில் நிதி அமைச்சர் என்றுதான் இன்னும் உள்ளது. குற்றவாளியாக நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட அம்மையார் படம்தான் அங்கு உள்ளது. முதல்–அமைச்சர் அறையில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தால் பணியாற்ற முடிய வில்லை. இதைவிட வெட்கக்கேடு என்னவாக இருக்க முடியும்”.
“இதை தமிழக மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மீண்டும் ஜனநாயகம் தழைக்க, தலைவர் கலைஞர் ஆட்சி உருவாக சபதம் ஏற்போம் என மு.க.ஸ்டாலின் கூறினார்.