கோலாலம்பூர், நவம்பர் 28 – ஒவ்வொரு கால கட்டத்திலும், ஒவ்வொரு சூழலிலும் வாழும் – வாழ்ந்த – மனிதர்களின் வாழ்க்கைச் சம்பவங்களை திரைப்படங்களாக பதிவு செய்வதில் முனைப்பு காட்டும், இயக்குநர் வசந்தபாலனின் மற்றொரு மறக்கவியலாத படைப்பு காவியத் தலைவன்.
1940ஆம் ஆண்டுகளில் நாடகக் கலை வளர்ந்த விதத்தையும், நலிந்த விதத்தையும் காட்டியிருப்பதோடு, அந்தத் துறையில் ஈடுபட்டிருந்த மனிதர்களையும், அவர்களின் ரசனைகள், வலிகள், உணர்வுகளை நம்முன் உலவவிட்டுக் காட்டியிருக்கின்றார் வசந்தபாலன்.
வெயில் படத்தில் குடும்பத்தால் புறக்கணிக்கப்படும் ஒருவனின் மனவலியைப் பதிவு செய்தவர், ‘அங்காடித் தெரு’வில் சென்னையின் மிகப்பெரிய ஆடைகள் விற்பனை மையத்தில் வேலை செய்பவர்கள் படும் பாட்டையும், ‘அரவான்’ படத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் திருட்டைத் தொழிலாகக் கொண்ட தமிழ் மக்களில் ஒரு பிரிவினரின் வாழ்வியலையும் நம் கண் முன்னே கொண்டு வந்தார்.
காவியத் தலைவன், 1940ஆம் ஆண்டுகளின் நாடகக் கலைஞர்களைப் பற்றிய சம்பவங்களைக் கொண்ட கதை. பழைமை சம்பவங்கள் என்றாலும், சுவாரசியம் குன்றாமல், இன்றைய இளம் தலைமுறையினரும் பார்க்கும்படி படமாக்கியிருக்கின்றார்கள்.
வசந்தபாலனின் கற்பனைக் கதை வடிவத்திற்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனங்களை எழுதிக் கொடுத்திருக்கின்றார்.
கதை
மேடை நாடகத் துறை கொடிகட்டிப் பறந்த காலத்தில் இரண்டு முன்னணி நாடக நடிகர்களுக்குள் ஏற்படும் நட்பு, பின்னர் தொழில் ரீதியாக ஒருவர் மற்றவர் மீது காட்டும் பொறாமை, அதன் காரணமாக, எழும்பும் வன்மம், வஞ்சகம், போன்றவற்றை, காதலையும், குரு பக்தியையும், சேர்த்துக் கோர்த்திருக்கின்றார்கள்.
படத்தின் ஆரம்பக்காட்சிகளில் “வாங்க மக்கா வாங்க, எங்க நாடகம் பார்க்க வாங்க…” என குரல் உயர்த்திப் பாடும் சித்தார்த், பிரிதிவி ராஜ் – இரண்டு நாயகர்களின் பாடலிலேயே நாம் நிமிர்ந்து உட்கார்ந்து விடுகின்றோம்.
இடைவேளை வரை இரண்டு நாடக நடிகர்களின் நட்பை மட்டும் மையமாக வைத்தும், கலகலப்பான நாடகக் காட்சிகளையும் வைத்தும் காட்சிகள் நகர்கின்றன. ஆனால் இடைவேளைக்குப் பின்னர், அந்த இரு நாடகக் கலைஞர்களின் நட்பைக் கூறுவதா, நாடகக் கலை எப்படி நலிந்தது என்பதைச் சொல்வதா, சுதந்திரப் போராட்டத்தைச் சொல்வதா, கதாநாயகனின் காதலை விவரிப்பதா என இயக்குநர் குழம்பியிருப்பது நன்கு தெரிகின்றது.
அந்தக் குழப்பத்தினாலேயே படமும் இடைவேளைக்குப்பின்னர் தொய்வு காண்கின்றது. படத்தின் இறுதிக் காட்சியில் பரபரப்பாகக் காட்டப்பட வேண்டிய கிளைமாக்ஸ், நாம் எதிர்பார்த்தது போலவே அமைந்துவிட்டது படத்தின் பின்னடைவு.
இறுதி உச்சகட்டக் காட்சியில் இரண்டு நாயகர்களும் சவசவ எனப் பேசுவதால் விறுவிறுப்பாகப் போக வேண்டிய இறுதிக்காட்சி போரடிப்பை ஏற்படுத்துகின்றது.
நடிப்புப் போட்டி
இயக்குநரின் கற்பனைத் திறனுக்கும் அவரது முயற்சிக்கும் கைகொடுத்திருப்பவர்கள் முன்னணி நடிகர்களான சித்தார்த்தும் பிரிதிவிராஜூம். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கின்றார்கள்.
சித்தார்த்துக்கு நல்ல வாய்ப்பு. பல பரிமாணங்களில் வாழ்ந்திருக்கின்றார். குடிகாரனாகி விட்ட சோகத்தையும், நாடகத்தில் ராஜபார்ட் வேஷம் கட்டும் உற்சாகத்தையும் திரையில் தனது உடல் மொழியால் கொண்டுவந்து காட்டியிருக்கின்றார். அனுபவம் வாய்ந்த நாசரோடு சரிநிகர் சமமாக சவால் விட்டு நடித்திருக்கின்றார்.
மேடையில் பரத நாட்டிய நடனம் ஆடும் திறனையும் சித்தார்த் காட்டியிருக்கின்றார்.
அவருக்கு இணையான, ஆனால் எதிர்மறையான ‘நெகடிவ்’ பாத்திரம் பிரிதிவி ராஜூக்கு. இருப்பினும் துணிந்து ஏற்று, தனக்குள் புகையும் பொறாமை, குரூரம், வன்மை ஆகிய குணாதிசயங்களை தனது கண்களுக்குள்ளும், முகபாவங்களிலும் இறுதிக் காட்சி வரை நன்கு கொண்டு வந்திருக்கின்றார் பிரிதிவிராஜ்.
நாடக ஆசிரியர் சிவதாஸ் வாத்தியாராக கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கின்றார் நாசர்.
நாயகி வேதிகாவை ‘பரதேசி’ போன்று காட்டாது, அவரது அசல் நிறத்தோடும், அழகுத் தோற்றத்தோடும் காட்டியிருக்கின்றார்கள்.
படத்தில் முன்பாதியில் ஜமீந்தார் தங்கையாக வந்து சித்தார்த்தைக் காதலிக்கும் பெண் கவர்கின்றார். ‘ஏய் மிஸ்டர்’ பாடலில் ரஹ்மானின் துள்ளல் இசையோடு அவர் போடும் ஆட்டம் கவர்கின்றது. வடநாட்டைச் சேர்ந்த அவரது பெயர் அணைக்கா ஜோதியாம்!
படத்தின் பலம்
இயக்குநரின் கற்பனைக்கு கூடுதல் வளம் சேர்த்து படத்தை இன்னொரு தளத்திற்கு கொண்டு சென்று படத்தின் மிகப் பெரிய பலமாகத் திகழ்வது ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கோர்வை.
இதுவரை கேட்காத ரஹ்மான் எனக் கூறும் வண்ணம், நம்மை படத்தின் அந்த காலக் கட்டத்திற்கே கொண்டு சென்றிருக்கின்றார். படம் முழுக்க எம்.எஸ்.விஸ்வநாதன்களையும், கே.வி.மகாதேவன்களையும், ஜி.ராமநாதன்களையும் கேட்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தியிருக்கின்றார்.
பின்னணி இசையில் மட்டும் சில இடங்களில் ரஹ்மானின் மேற்கத்திய இசைப் பாதிப்பு. மற்றபடி முழுக்க, முழுக்க பழையகால சினிமா பாணியிலான பாடல்கள். பின்னணி இசைதான்!
“யாருமில்லா தனியரங்கில்..” காதுக்கு இதமாக ஒலிக்கின்றது. மற்ற பாடல்களும் தாளம் போட வைக்கின்றன.
ஒளிப்பதிவு இயக்கம், நீரவ் ஷா. அவரது ஒளிப்பதிவுத் தரமும் குறிப்பிடத்தக்க ஒன்று உறுத்தல் இல்லாத வண்ணங்களில் நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையை முடிந்த வரையில் நம் கண் முன்னே கொண்டு வந்து காட்டுகின்றார்.
துணைக் கதாபாத்திரமாக வரும் தம்பி ராமையா தனது வழக்கமான முத்திரையைப் பதித்திருக்கின்றார்.
படத்தின் தலைப்புகளை பழைய பட பாணியில் ‘சம்பாஷணை’ என்றும் ‘ஸங்கீத இயக்கம்’ என்றும் அந்தக்கால சமஸ்கிருத மொழிப் பயன்பாட்டோடு காட்டுகின்றார்கள்.
பலவீனங்கள் – குறைகள்
சாதாரண நாடக நடிகரான சித்தார்த், ஜமீன் மாளிகையில் அடிக்கடி சென்று, ஜமீன்தாரின் தங்கையைக் காதலிப்பது நம்பும்படியாக இல்லை. அதுவும் ஜமீன் வீட்டுக்குள்ளேயே சரசமும், பாடலும் மேற்கொள்ளும் அளவுக்கு யாருமே இல்லாத ஜமீன் வீடா?
அதேபோன்று, நாசர், பிரிதிவிராஜைவிட ஏன் சித்தார்த்தை நாயகனாக உயர்த்திக் காட்ட விரும்புகின்றார் என்பதற்கான ஆழமான சம்பவங்கள் இல்லை.
படத்தை மேலோட்டமாக அணுகியிருக்கின்றார்கள். காட்சிகளிலும், சம்பவங்களிலும் அழுத்தமோ ஆழமோ இல்லை. எவ்வளவோ சோகங்களையும் சுவாரசியங்களையும் கொண்டதாக பாய்ஸ் நாடகக் குழுக்களை விவரிப்பார்கள். ஆனால், இவ்வளவுதானா இவர்கள் வாழ்க்கை என்ற கேள்வி படத்தைப் பார்க்கும்போது நமக்குள் எழாமல் இல்லை.
வேதிகா, சித்தார்த் காதலில் கூட சுவாரசியமான சம்பவங்களோ இல்லை. சித்தார்த்தைப் பார்த்தவுடன் காதலித்து விடுகின்றார் வேதிகா.
பட ஆரம்பத்திலேயே பிரித்திவிராஜை கையில் துப்பாக்கியோடு காட்டிவிடுவதால், படத்தின் இறுதி உச்சகட்ட காட்சி நெருங்கும்போது அதன் முடிவையும் நம்மால் ஊகிக்க முடிகின்றது.
இவ்வாறு ஆங்காங்கு சில குறைகள் இருப்பினும், முழுக்க முழுக்க வர்த்தக ரீதியாக மாறிவிட்ட இன்றைய தமிழ் சினிமா உலகின் முன்னோடிகளான நாடகக கலைஞர்களை – அவர்களின் வாழ்க்கையை- 1940ஆம் ஆண்டுகளுக்கே பின்னோக்கி சென்று பதிவு செய்திருக்கும் வசந்தபாலனின் முயற்சிக்கும், உழைப்புக்கும் நாம் தலைவணங்கத்தான் வேண்டும்.
காவியத் தலைவன் – கால ஓட்டத்தில் காணாமல் போய்விட்ட தமிழ் நாடகக் கலை முன்னோடிகளை, இன்றைய சமுதாயம் திரும்பிப் பார்த்து, கண்டிப்பாக இரசிக்க வேண்டிய முக்கியமான வரலாற்றுப் பதிவு.
-இரா.முத்தரசன்