ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 15 தொகுதிகளுக்கு நடந்த முதல்கட்டத்தில் 71.28% வாக்குகள் பதிவானது. இரண்டாம் கட்ட தேர்தல் வரும், 2-ஆம் தேதி 18 தொகுதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, உதம்பூர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது; “ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சிப் பணிகள் செய்யப்படாததால், கடந்த 30 ஆண்டுகளாக மாநிலத்தில் எந்தவொரு வளர்ச்சியும் ஏற்படவில்லை”.
“ஆளும் தேசிய மாநாட்டுக்கட்சி, காங்கிரஸ், பிடிபி ஆகியவை ஊழலில் ஈடுபட்டு, மக்களையும் அச்சுறுத்தி வருகின்றனர். காஷ்மீர் மக்கள், அதிகளவில் வாக்களித்து ஜனநாயகத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன்”.
“நான் மட்டுமல்ல, நாட்டில் வாழும் 125 கோடி பேரும் உங்களை பாராட்டுகிறார்கள். இந்த நாடு உங்களால் பெருமை அடைகிறது. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. துப்பாக்கி, குண்டுகளால் பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டாலும், மாநிலத்தில் ஜனநாயகம் இன்னும் உயிருடன் இருக்கிறது”.
“இதனால், தீவிரவாதிகள் அதிருப்தியில் உள்ளனர். ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை காஷ்மீர் மக்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மாநிலத்துக்கு என்னென்ன தேவையோ, அதனை காலதாமதமின்றி நிறைவேற்ற நாங்கள் முடிவு செய்துள்ளோம்”.
“மாநிலத்தை வளர்ச்சியடைய செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.ஊழலுக்கு முடிவுகட்ட எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். மாநிலத்தில், 30 ஆண்டுகள் ஏற்படாத வளர்ச்சியை, 5 ஆண்டுகளில் ஏற்படுத்தி காட்டுவோம்”.
“உங்களுக்கு ஏற்பட்ட வலியை எனக்கு ஏற்பட்டதாக நான் உணர்கிறேன். அதனால்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் தீபாவளி தினத்தை கழித்தேன்” என மோடி பேசினார்.