கோலாலம்பூர், ஜனவரி 9 – சீகா (SICA-South Indian Cinematographers Association) எனப்படும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் விருதுகள் வழங்கும் விழா இன்றும் நாளையும் கோலாலம்பூரில் நெகாரா உள் அரங்கில் (ஸ்டேடியம் நெகாரா) கோலாகலமாக நடைபெறுகின்றது.
அண்மையக் காலங்களில் இந்தியாவின் சினிமா விருதுகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெறும் முக்கிய நகராக கோலாலம்பூர் புகழ் பெற்று வருகின்றது.
நேற்று நடைபெற்ற “சீகா” பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் செல்வமணி, பாரதிராஜா, டத்தோ டி.மோகன்
சில மாதங்களுக்கு முன்னால் சைமா எனப்படும் தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சிறப்புற நடந்தேறியது. அதன்பின்னர் தற்போது 2015ஆம் ஆண்டின் முதல் தொடக்கமாக இந்த ‘சீகா’ விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகின்றது.
நிகழ்வின் முக்கிய பிரமுகராக நடிகர் கமலஹாசன் கலந்து சிறப்பிக்கின்றார். அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகின்றது.
இன்று, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய பிறமொழிகளுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சி இரவு 7.00 மணியளவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முழுக்க முழுக்க தமிழ்த் திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவாக இரண்டாம் நாள் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. நாளை இரவு 7.00 முதல் நிகழ்ச்சிகள் தொடங்கும்.
இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை அரங்கின் வாசலிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இந்தியாவிலிருந்து ஏராளமான நட்சத்திரங்கள் தற்போது கோலாலம்பூரை நோக்கி படையெடுத்து வந்துள்ளனர்.

சீகா விருதுகள் விழா குறித்து நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, மலேசிய மண்ணில் இந்த நிகழ்ச்சியை நடத்துவது குறித்து பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சிகளின் உள்நாட்டு ஏற்பாடுகளை, மஇகாவின் முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகன் முன்னின்று நடத்தி வருகின்றார்.

இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் ராதாரவி,இயக்குநர் செல்வமணி, நடிகரும் இயக்குநருமான ரமேஷ் கண்ணா, மனோபாலா, சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் நளினி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்களுடன் சீகா விருதுகள் நிகழ்வின் உள்நாட்டு ஏற்பாட்டாளர் டத்தோ டி.மோகனும் உடனிருந்தார்.
இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட திரைப்பட நட்சத்திரங்கள் சிலரை இங்கே காணலாம்:






