கொழும்பு, ஜனவரி 14 – ‘‘இலங்கையில் நீதி, சமரசம், ஒற்றுமையை ஏற்படுத்த, உண்மையை பின்பற்ற வேண்டும், மனித உரிமைகளை மதிக்க வேண்டும்’’ என போப் பிரான்சிஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர் போப் பிரான்சிஸ், இலங்கை வர வேண்டும் என முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்றுக்கொண்ட போப் பிரான்ஸிஸ் இலங்கையில் 2 நாள் பயணம் செல்ல திட்டமிட்டார்.
இந்நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திட்டமிட்டபடி போப் பிரான்ஸிஸ் நேற்று இலங்கை வந்தார். கொழும்பு பண்டாரநாயகே அனைத்துலக விமான நிலையத்தில் அவரை அதிபர் மைத்ரிபால சிறிசேன வரவேற்றார்.
அதன்பின் போப் அளித்த பேட்டியில் கூறியதாவது: “இலங்கையில் சமரசத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதற்கு விடுதலைப்புலிகளுடனான போர் பற்றிய உண்மையை வெளிக்கொணர வேண்டும்”.
“நீதி, சமரசம், ஒற்றுமையை ஏற்படுத்த இது அவசியம். இங்கு மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணி மிக உயர்ந்தது. இதில் கட்டமைப்பு வசதிகள், மக்களின் தேவைகள் மேம்பட வேண்டும்”.
“முக்கியமாக மனிதனின் கவுரவம் மேம்பட வேண்டும், மனித உரிமைகளை மதிக்க வேண்டும். சமூகத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும், குரல் கொடுக்க வேண்டும்”.
“மக்கள் தங்களின் கருத்துக்களை, தேவைகளை, எண்ணங்களை அச்சமின்றி சுதந்திரமாக தெரிவிக்க வேண்டும்” என போப் கூறினார். புலிகளுடனான இறுதி கட்ட போரில் நடந்த போர் குற்றங்கள் குறித்த ஐ.நா.விசாரணைக்கு இலங்கை மறுப்பது குறித்த கேள்விக்கு போப் பதில் அளிக்கவில்லை.
இலங்கை பயணத்தின் முதல் நாளான நேற்று இலங்கையின் தலைமை பாதிரியார்கள், பல மதத் தலைவர்களையும் போப் சந்தித்து பேசினார்.
இலங்கையில் உள்ள சிங்களர்கள் மற்றும் தமிழர்கள் இடையே கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்திய இலங்கை பாதிரியார் கியூஸ்பே வாஸ்க்கு, போப் இன்று புனிதர் பட்டம் அறிவிக்கிறார்.
மன்னார் பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மது தேவாலயத்தில் போப் இன்று பிரார்த்தனை நடத்துகிறார். தமிழர் வசிக்கும் பகுதிகளுக்கும் சென்று போப் இன்று பிரார்த்தனை செய்கிறார்.
கடந்த 1995-ஆம் ஆண்டுக்கு பின், இலங்கைக்கு போப் வருவது இதுவே முதல் முறை. விமான நிலையத்தில் பேட்டிளித்த இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன,
‘‘மக்கள் இடையே அமைதியையும், நட்பையும் எனது அரசு மேம்படுத்தி வருகிறது. பல்வேறு மதங்களை மதித்து நடப்பது இலங்கை மக்களின் நூற்றாண்டு பாரம்பரியம்’’ என்றார்.
-படங்கள் EPA