Home உலகம் போப்பாண்டவர் மறைவுக்கு பிரதமர் அன்வார் இரங்கல்!

போப்பாண்டவர் மறைவுக்கு பிரதமர் அன்வார் இரங்கல்!

49
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: இன்று திங்கட்கிழமை மறைந்த போப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

“உலகின் தென் மண்டலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப்பாண்டவர் என்ற பெருமையைப் பெற்றவர் என்பதோடு, பதட்டம் நிறைந்த, நிலைத்தன்மையற்ற இந்த உலகில் பரிவு, பணிவு, நீதி ஆகியவற்றை உரக்கக் கூறும் நன்னெறி குரலாக அவர் திகழ்ந்தார். மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு கண்ணியமிக்க வாழ்க்கை வழங்குவது போன்ற அம்சங்களில் அவர் தலைமைத்துவ  முன்னுதாரணத்தைக்  காட்டினார். அவரின் இந்தப் பணிகள், அவரின் ஆளுமைக்கு உட்பட்ட கத்தோலிக்க தேவாலயங்களையும் தாண்டி எதிரொலித்தது” என அன்வார் மறைந்த போப்பாண்டவருக்கு புகழாரம் சூட்டினார்.

“அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதில் அவர் எப்போதுமே முன்னணியில் இருந்தார். மத நம்பிக்கைகளுக்கிடையிலும், கலாச்சாரங்களுக்கு இடையிலும் உறவுப் பாலங்களை உருவாக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக முஸ்லீம் நாடுகள் உள்ளிட்ட பலருக்கும் அவர் மீது மரியாதை ஏற்பட்டது. காசா பகுதியில் நிகழ்த்தப்பட்ட கொடுமையான அவலங்களை அவர் நன்னெறியோடு தெளிவாக எடுத்துரைத்தார். வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கும் சரிசமமான பரிவு காட்டப்பட வேண்டும்” என அவர் அறிவுறுத்தினார்.

#TamilSchoolmychoice

குடியேறிகள், அகதிகள் ஆகியோரின் கண்ணியமிக்க வாழ்க்கைக்காவும் அவர் போராடினார். அனைத்துலக சமூகம் இந்தத் தரப்பினரின் பிரச்சனைகளை மனிதாபிமானத்தோடு, மனசாட்சியோடும் அணுக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அவரின் வாழ்க்கையின் சேவைகளையும், அமைதியான வலிமையையும் காணும்போது ‘இவர்தான் உண்மையான ஆண்மகன்’ என இயற்கையும் உலகமும் நிமிர்ந்து நின்று கூறுகிறது எனலாம்.

அவர் வத்திக்கான் நகரில் பதவியேற்ற ஆரம்ப கட்டத்தில் அவரைச் சந்தித்து உரையாடும் அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது என்றும் குறிப்பிட்ட அன்வார், அரசாங்க சார்பிலும் மலேசிய மக்கள் சார்பிலும், உலகிலுள்ள அனைத்து கத்தோலிக்கர்களுக்கும், குறிப்பாக மலேசியா வாழ் கத்தோலிக்க சமூகத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அன்வார் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

அவர் விட்டுச் சென்றிருக்கும் பாரம்பரியம் தொடரட்டும் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

உலகின் அனைத்து கத்தோலிக்க மதத்தினருக்கும் தலைமை தாங்குபவரான போப்பாண்டவர் பிரான்சிஸ் இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 21) உடல் நலக் குறைவால் காலமானார். அவரின் பூர்வீகம் அர்ஜெண்டினா ஆகும். தென் அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப்பாண்டவராக அவர் வரலாறு படைத்தார்.