கோலாலம்பூர், ஜனவரி 20 – புக்கிட் நானாசில் இருந்து கிள்ளான் ஆற்றுப்படுகை வரை அமைக்கப்பட்டிருந்த நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இரகசிய சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
6 மாதங்களுக்கு முன்னர், அந்த பகுதியில் மண் சரிவு சீரமைப்பிற்காக கோலாலம்பூர் மாநகரசபையால் நியமிக்கப்பட்ட குத்தகை நிறுவனம் தான் இந்த 10 மீட்டர் நீளமுடைய ஆயுதங்கள், உணவு மற்றும் புதையல்களை சேமித்து வைக்கும் சுரங்கப்பாதையைக் கண்டறிந்தனர்.
இது குறித்து கோலாலம்பூர் மாநகரசபை கட்டுமானப் பணிக்குழுவின் தலைவர் டான் கெங் சோக் கூறுகையில், கடந்த 1868 மற்றும் 1871-ல் நடைபெற்ற சிலாங்கூர் உள்நாட்டுப் போரின் போது இந்த சுரங்கப்பாதை இரகசியமாக கிள்ளானுக்கு செல்வதற்குப் பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இந்த பகுதி சுற்றுலாத் தளமாக மாற்றப்படலாம்” என்று தெரிவித்துள்ளார்.
19 -ம் நூற்றாண்டு வாக்கில் புக்கிட் கோம்பாக் என்று அழைக்கப்பட்ட அப்பகுதியில் மண்டாஹிலிங் சமுதாயத்தினர் வாழ்ந்து வந்தனர். கிள்ளான் போரின் போது மண்டாஹிலிங் மக்கள் அங்கு நிறைய அன்னாசி பழங்களை விளைவித்தனர். அதனால் அப்பகுதிக்கு புக்கிட் நானாஸ் என்று பெயர் வந்தது என்று வரலாறு கூறுகின்றது.