காளான் சேர்த்துத் தயாரான உணவுகளுக்கு நட்சத்திர ஓட்டல் அந்தஸ்தே உண்டு. அதனால், மிகச் சுலபமாக அவற்றை வீட்டிலேயே வளர்த்து, அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
‘‘காளான் என்கிற போதே பலரும் அசைவ உணவா என சந்தேகம் கொள்கின்றனர். இது 100% சைவ உணவு. மழைக்காலத்தில் அங்கங்கு முளைப்பது நாய்க்குடை எனப்படும் பூஞ்சைக் காளான்.
நாம் இதை உட்கொள்ளக் கூடாது. உலகில் நூற்றுக்கணக்கான காளான் வகைகள் உள்ளன. எல்லாவற்றையும் உட்கொள்ள இயலாது. சமையலுக்கு என்று தனியாக வளர்த்து கடைகளில் விற்பதை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
காளான்களுக்கு அதிக முக்கியத்துவம் வந்ததற்கு காரணம் இதில் உள்ள மிகக்குறைவான கலோரிகள். சிறந்த புரதச் சத்தைக் கொண்டது. குறைவான கொழுப்பு உடையது.
அதுவும் உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு கொண்டதால், எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உண்ண நினைக்கும் உணவு. காளான் எளிதில் ஜீரணமாகக் கூடியது.
சமைப்பதற்கு மிகக்குறைவான நேரம் தான் ஆகும். இதில் அதிகமான பொட்டாசியமும் குறைவான சோடியமும் உள்ளதால் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்ல உணவாகக் கருதப்படுகிறது.
பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் ஒரே உணவில் இத்தனை இருப்பது அரிது. இதைத் தவிர புற்று நோய் வராமல் பாதுகாக்கக்கூடிய சக்தி இதில் உண்டு என்பது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.