பட்டாயா, பிப்ரவரி 21 – ‘கருத்தரிப்பு சுற்றுலா’ (Fertility Tourism) என்றவுடன் விவரமறிந்த பலருக்கும் நினைவிற்கு வரும் இடம் தாய்லாந்து. வளர்ந்த நாடுகளில் வாடகைத் தாய் முறைக்கு கடுமையான சட்டதிட்டங்கள் உள்ளன. ஏனெனில் ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது ஒரு பெண்ணுக்கு உடல் மற்றும் மனம் ரீதியாக பல பாதிப்புகளை உண்டாக்கும்.
ஆனால், தாய்லாந்தில் இதுபோன்ற எந்த சட்ட திட்டமும் இல்லை. இதனால் உலகம் முழுவதிலும் உள்ள பல தம்பதிகள் அங்கு வந்து தாய்லாந்து பெண்களை வாடகைத்தாய்களாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்கான நாகரீக பெயர்தான் ஃபெர்டிலிட்டி டூரிசம்.
எனினும் சமீபத்தில், தாய்லாந்தில் இரு வாடகைத் தாய்களுக்கு ஏற்பட்ட அவலநிலையால், அந்நாட்டு அரசு இந்த முறைக்கு கடுமையான சட்டங்களை இயற்றி உள்ளது.
ஆஸ்திரேலியாவிலிருந்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க தாய்லாந்து வந்து பெண் ஒருவர், பிரசவத்திற்கு பிறகு குழந்தை வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்தவுடன், அந்தக் குழந்தையை வாடகைத் தாயிடமே விட்டுவிட்டு ஆஸ்திரேலியா ஓடிவிட்டார்.
மற்றொரு சம்பவத்தில் ஜப்பான் நாட்டுக்காரர் ஒருவர் தாய்லாந்து பெண்கள் மூலமாக 16 குழந்தைகளுக்கு தந்தையானார். இந்த சம்பவத்தை பத்திரிக்கைகள் ‘குழந்தைகள் தொழிற்சாலை’ என்று கடுமையாக விமர்சித்தன.
கடந்த வருடம் நடந்த இந்த இரு சம்பவங்கள் காரணமாக தாய்லாந்து அரசு நேற்று முன்தினம் முதல் வாடகைத் தாய் முறையை ஒழிக்க பல சட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது.
இது குறித்து தாய்லாந்து அரசு வட்டாரங்கள் கூறுகையில், “இனி தாய்லாந்தில் வெளிநாட்டினருக்கு தேவையான வாடகைத்தாய்கள் கிடைக்கமாட்டார்கள்” என்று கூறுகின்றன.