Home நாடு சோஷலிஸ்ட் கட்சி தலைமைச் செயலாளர் அருட்செல்வனை காவலில் வைக்க நீதிமன்றம் மறுப்பு – இன்று விடுதலையாகலாம்!

சோஷலிஸ்ட் கட்சி தலைமைச் செயலாளர் அருட்செல்வனை காவலில் வைக்க நீதிமன்றம் மறுப்பு – இன்று விடுதலையாகலாம்!

1182
0
SHARE
Ad

கோலாலம்பூர், பிப்ரவரி 20 – நேற்று கைது செய்யப்பட்ட மலேசிய சோஷலிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலாளர் எஸ்.அருட்செல்வனை தொடர்ந்து காவலில் வைக்க காவல் துறையினர் செய்த விண்ணப்பத்தை கோலாலம்பூரிலுள்ள கீழ்நிலை (மாஜிஸ்ட்ரேட்) நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

இதனைத் தொடர்ந்து அருட்செல்வன் இன்று விடுதலையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

S Arutchelvanநேற்று இரவு அருட்செல்வன் கைது செய்யப்பட்டதால், இன்று மாலை 7 மணி வரை அவரைக் காவல் வைத்திருக்க முடியும் என்றும் எதனால், அதற்குள் தங்களின் விசாரணையை முடிக்க காவல் துறையினருக்கு போதுமான அவகாசம் இருக்கிறது என்றும் நீதிபதி தனது மறுப்புக்கு விளக்கம் அளித்ததாக அருட்செல்வன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இதன் காரணமாக தற்போது கோலாலம்பூர் டாங் வாங்கி காவல் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அருட்செல்வன் இன்று விடுதலையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மையில் அன்வார் இப்ராகிம் தண்டிக்கப்பட்டது தொடர்பில் அவர் விடுத்த ஓர் அறிக்கையின் காரணமாக  அவர் கைது செய்யப்பட்டு, அவர்மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஏறத்தாழ 10 காவல் துறை அதிகாரிகள் காஜாங்கிலுள்ள அருட்செல்வனின் இல்லத்தை முற்றுகையிட்டு அவரைக் கைது செய்ததோடு, அவரது கணினியையும் கைப்பற்றினர்.

தேசநிந்தனைச் சட்டம் பிரிவு 4(1)(சி) இன் கீழ் அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

இந்த சட்டப் பிரிவின் கீழ் தேச நிந்தனைக்குரிய எந்த ஒரு பிரசுரத்தையோ அச்சடித்தாலோ, பதிப்பித்தாலோ, விற்பனை செய்தாலோ, விற்பனைக்கு வழங்கினாலோ, விநியோகம் செய்தாலோ, மறுபதிப்பு செய்தாலோ அவர் மீது குற்றம் சாட்டப்படலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5,000 ரிங்கிட் அபராதமோ, அல்லது 3 ஆண்டுகள் வரை தண்டனையோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.