மூவார், பிப்ரவரி 24 – புக்கிட் கெப்போங் காவல் நிலையம் மீது கம்யூனிஸ்ட்கள் தாக்குதல் நடத்தி சுமார் 65 ஆண்டுகளாகிவிட்டன. அச்சம்பவத்தில் தனது தாயையும், இளைய சகோதரரையும் பறிகொடுத்த ஜமிலா அபுபாக்கர் (65 வயது), இன்னமும் தன்னால் அந்த துயரத்தை மறக்க இயலவில்லை என்கிறார்.
புக்கிட் கெப்போங் காவல் நிலையத்தில் நடைபெற்ற ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளின் சந்திப்பு நிகழ்வொன்றில் பேசிய அவர், நாட்டில் நிலவி வரும் இணக்கமும் அமைதியும் நீடிக்க இளைய தலைமுறையினர் உறுதியேற்க வேண்டும் என்றார். முன்பு நடந்த சம்பவங்கள் மீண்டும் அரங்கேறாமல் பார்த்துக் கொள்வது முக்கியம் என்றும் அவர் கூறினார்.
1950, பிப்ரவரி 23ஆம் தேதி.
அன்றுதான் புக்கிட் கெப்போங் காவல் நிலையம் மீது கம்யூனிஸ்ட்கள் தாக்குதல் நடத்தினர். அதிகாலை சுமார் 5 மணியளவில் அத்தாக்குதல் நிகழ்ந்தது.
“அப்போது நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன். திடீரென எழுந்த வெடிச்சத்தங்களைக் கேட்டு அதிர்ந்து கண்விழித்தேன். அப்போது பல படுகொலைகள் எவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்பது இன்னனும் என் நினைவில் பதிந்துள்ளது. என் தந்தையின் மார்ப்பிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருக்க, என் தாயாரும் இளைய சகோதரர் ஹாசனும் எந்தவித அசைவும் இன்றி தரையில் கிடந்தனர். இருவரும் ஒருவரையொருவர் இறுக அணைத்தபடி இருந்ததைக் கண்டேன்.
“சில நொடிகளுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் வீரர் ஒருவர் என்னை அருகிலிருந்த சாக்கடையில் தூக்கி வீசினார். அவர் என்னை குத்திக் கொல்வதற்குள், கிராமத்தினர் விரைந்து வந்து என்னை மீட்டு மறைவிடத்திற்கு கொண்டு சென்றனர்,” என்று செய்தியாளர்களிடம் கண்களில் கண்ணீர் தளும்ப நடந்தவற்றை விவரித்தார் ஜமிலா அபுபாக்கர்.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு கடற்படை காவல் அதிகாரியான தனது தந்தை பணியை தொடர்ந்தாலும், அவரால் நிம்மதியாகப் பணியாற்ற முடியவில்லை என்று குறிப்பிட்ட ஜமிலா, அப்போதைய கலவரத்தில் தனது மற்றொரு இளைய சகோதரரான ஹுசினை பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
“எல்லாம் மிக வேகமாக நடந்து முடிந்துவிட்டது. மற்றொரு தம்பியான ஹுசினையும் அந்த துயரச் சம்பவத்தால் இழந்திருப்போம். நல்லவேளையாக சுமார் 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஹுசினை தேடிக் கண்டுபிடித்து அவருடன் இணைந்தோம்,” என்கிறார் ஜமிலா.
இந்நிகழ்வில் பேசிய சிஐடி இயக்குநர் கமாண்டர் டத்தோஸ்ரீ முகமட் சாலே, 1948 முதல் 1989 வரையில் கம்யூனிச அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் நிலவிய அவசரநிலை காலத்தின்போது, காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தார் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானதாகத் தெரிவித்தார்.
“இது நம் அனைவருக்குமான பாடம். நாட்டை பாதுகாப்பதற்காக பலர் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்,” என்றார் முகமட் சாலே.