சென்னை, மார்ச்.2 – மறைமலைநகரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் முகமூடியை 400 மாணவ, மாணவிகளுக்கு அணிவித்து பன்னாட்டு நீதி கேட்டு முழக்கமிட்டார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
தமிழகத்தில் பூரண மது விலக்கை வலியுறுத்தி கடந்த 18ம் தேதி கோவளத்தில் இருந்து பிரச்சார நடைப்பயணம் மேற்கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, செங்கல்பட்டை அடுத்த மறைமலைநகரில்(நேற்றுமுன்தினம்) வியாழக்கிழமை நிறைவு செய்தார்.
அப்போது அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ , போராட்டக்களத்தில் நீதி கேட்கும் இந்த மாணவர்களின் குரல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனசாட்சியை தொட்டு நியாயம் கேட்கும் வகையில் பன்னாட்டு நீதி கிடைக்க வேண்டும் என்றும், ஆயிரக்கணக்கான பச்சிளம் குழந்தைகளை ஈவு, இரக்கமின்றி கொன்ற ராஜபட்சேயை நீதிமன்ற கூண்டில் நிறுத்த உலக நாடுகள் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் அவர் ” குழந்தைகளே நீங்கள் வளர்ந்து ஆளாகும்போது இந்த பூமியில் நான் இருக்கமாட்டேன். ஆனால் உங்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க மதுப் பழக்கம் இல்லாமல் நீங்கள் நல்லமுறையில் வளரவேண்டும்” என்று மாணவர்களிடம் உருக்கமாக வேண்டிக்கொண்டார்.
” தமிழினத்தையே அழிக்க வேண்டும் என்பதற்காக பாலச்சந்திரனை போன்ற ஆயிரக்கணக்கான பாலகர்களை கொலை செய்த சிங்கள இனத்தையே இலங்கையில் இருந்து வெளியேற்றவேண்டும்” என்று உணர்ச்சி பொங்க மாணவர்களிடம் உரையாற்றினார்.