கோலாலம்பூர், மார்ச் 9 – மறுதேர்தல் குறித்த சங்கங்களின் பதிவிலாகா உத்தரவுகளுக்கு எதிராக, மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் உட்பட அக்கட்சியைச் சேர்ந்த மூன்று முக்கியத் தலைவர்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த சீராய்வுமனு (Judicial review) மீதான விசாரணை வரும் மார்ச் 16-ம் தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அண்மையில், பழனிவேலுடன், கட்சியின் உதவித்தலைவர்கள் டத்தோ எஸ்.சோதிநாதன், டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன் மற்றும் முன்னாள் பொதுச்செயலாளர் ஏ.பிரகாஷ் ராவ் ஆகியோர் மறுதேர்தல் குறித்த ஆர்ஓஎஸ் உத்தரவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அதே வேளையில், இந்த நால்வரைப் போலவே மஇகா-வைச் சேர்ந்த ஏ.கே.இராமலிங்கமும் ஆர்ஓஎஸ் உத்தரவுகளுக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே, மஇகா முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் எஸ்.ஏ.விக்னேஷ்வரன் இந்த வழக்கில் தன்னை மூன்றாது தரப்பாக சேர்த்து கொள்ள முடியுமா? என்பது குறித்து தனது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கு தக்க சட்ட ஆதாரங்களைக் காட்டுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.