யாழ்ப்பாணம், மார்ச் 15 – இலங்கை சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து அங்குள்ள யாழ் மக்களைச் சந்தித்ததோடு, பல நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதன் மூலம் வரலாற்றில் யாழ் நகருக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகின்றார்.
யாழ் மக்களுக்கு இந்தியா கட்டிக் கொடுத்த வீடுகள்
யாழ்ப்பாணத்தில் இந்தியா கட்டிக் கொடுத்த 27 ஆயிரம் வீடுகளை இலங்கை தமிழர்களுக்கு வழங்கினார்.
முதல் நாள் வருகையின்போது கொழும்பு நகரில் அந்த நாட்டின் அதிபர் சிறிசேனாவை சந்தித்து போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வு, மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.
அப்போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பின்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.
புத்த ஆலயத்திற்கு வருகை
தனது இரண்டாவது நாள் வருகையின்போது நேற்று காலை (14 மார்ச்) புத்த மத புனித நகரமான அனுராதபுரத்துக்கு சென்றார். அதன் பின்னர் தலைமன்னார் சென்று அங்கு ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
அனுராதபுரம் புத்த ஆலயத்தில் பூக்களை வைக்கும் மோடி – அருகில் இலங்கை அதிபர் சிறிசேனா
அந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று மதியம் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம், வடக்கு மாகாண தலைநகரான யாழ்ப்பாணத்துக்கு சென்றார். அவருடன் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயும் உடன் சென்றார்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் இந்த யாழ்ப்பாணம் நகரம்தான், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் பெரிதும் பாதிக்கப்பட்டு சீர்குலைந்தது. போருக்கு பின்னர் யாழ்ப்பாணம் பல முனைகளில் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இலங்கையின் வடக்கு மாநிலத்திற்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது வரலாற்றுபூர்வமாக இதுவே முதல் முறை ஆகும்.
யாழ்ப்பாணம் சென்ற பிரதமர் மோடிக்கு, தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான ஆண்களும் பெண்களும் திரண்டு வந்து அவரை வரவேற்றனர்.
யாழ் மக்களிடையே மோடி – ஓர் இல்லத்தில் பால் காய்ச்ச உதவுகின்றார்
உள்நாட்டு போரின் போது தீவைத்து எரிக்கப்பட்ட புகழ் பெற்ற யாழ்ப்பாணம் நூலகம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. அங்கு இந்தியாவின் உதவியுடன் ரூ.60 கோடி செலவில் புதிதாக கலாசார மையம் கட்டிடம் கட்டப்படுகிறது. அதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார்.
முதல்வர் விக்னேஸ்வரன் உரை
விழாவில் வடக்கு மாகாண முதல்–மந்திரி விக்னேஸ்வரன் மோடியை வரவேற்று பேசினார். அப்போது அவர், 13–வது அரசியல் சட்ட திருத்தம் பயனற்றது என்றும், தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் கிடைக்க இந்தியா உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மோடியுடன் பல்வேறு நிகழ்வுகளில் விக்னேஸ்வரனும் கலந்து கொண்டார்.