கோலாலம்பூர், மார்ச் 15 – நேற்று மாலை கோலாலம்பூரில், நுண்கலைக் கோயில் மண்டபத்தில் (டெம்பள் ஆஃப் பைன் ஆர்ட்ஸ்) நடைபெற்ற “இணைமதியம்” என்னும் தலைப்பிலான முரசு அஞ்சல் மென்பொருளின் 30ஆம் ஆண்டு நிறைவு விழாவின் போது, முரசு அஞ்சல் முதல்நிலை இலவசப் பதிகையை அதிகாரபூர்வமாக வெளியிட்டு துணைக் கல்வி அமைச்சர் ப.கமலநாதன் உரையாற்றினார்.
இணைமதியம் தமிழ் தொழில் நுட்ப விழா முரசு அஞ்சலின் 30ஆம் ஆண்டு விழாவாகவும், செல்லினம், செல்லியல் செயலிகள் தளங்களின் புதிய தொழில்நுட்ப அறிமுகங்களின் விழாவாகவும் ஒருசேர நடைபெற்றது.
இவ்விழாவில் இனி அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் முரசு அஞ்சல் முதல்நிலைப் பதிகை இலவசமாகவே இணையம் வழி வழங்கப்படும் என்று அந்த மென்பொருளின் உருவாக்குநர் முத்து நெடுமாறன் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அந்த இலவசப் பதிகையை அதிகாரபூர்வமாக வெளியிட்டு கமலநாதன் உரையாற்றினார்.
துணையமைச்சர் ப.கமலநாதன் இணையம் விழாவில் உரையாற்றுகின்றார்.
“இந்த விழாவில் கலந்து கொண்டது குறித்து உண்மையிலேயே நான் பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைகின்றேன். இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க பிரமுகர்கள் இங்கே வந்திருப்பது இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்துகின்றது. இங்கே வந்ததன் மூலம் செல்பேசித் தளங்களிலும், இணையம், கணினியிலும் தமிழ் மொழி கண்டுள்ள முன்னேற்றங்களையும், தொழில் நுட்ப அம்சங்களில் பெற்றுள்ள வளர்ச்சி குறித்தும் நான் நிறையத் தெரிந்து கொண்டேன். வியந்தும் போனேன். இதனை உருவாக்குவதில் பெரும்பாடு பட்ட முத்து நெடுமாறன் குழுவினருக்கு எனது பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த தொழில் நுட்ப மேம்பாடுகள் தொடர்பில் கல்வி அமைச்சு மூலமாகவோ, எனது தனிப்பட்ட ஒத்துழைப்பு மூலமாகவோ, என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன்” என்று தனது உரையில் கமலநாதன் குறிப்பிட்டார்.
கமலநாதனுக்கு (நடுவில்) நினைவுப் பரிசு வழங்கப்படுகின்றது. அருகில் முத்து நெடுமாறன் (இடது) செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் (வலது) …..
மேலும், தமிழ் மொழியின் பழம் பெருமைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் – செம்மொழி என்ற அதன் அந்தஸ்தை மட்டும் புகழ்ந்து கொண்டே இருக்காமல், தமிழை இதுபோன்று தொழில் நுட்ப ரீதியாகவும் மற்ற துறைகளிலும் எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என்றும் கமலநாதன் தனது உரையில் கேட்டுக் கொண்டார்.
“இங்கே வந்து பார்த்தபின், தமிழ் மொழி செல்பேசி மற்றும் கணினி தொழில் நுட்பங்களில் எந்த அளவுக்கு பரந்து விரிந்திருக்கின்றது என்பதைக் காணும்போது எனக்கும் உற்சாகம் ஏற்படுகின்றது. இனி நானும் எனது செல்பேசி வழி குறுஞ்செய்திகளையும் தகவல்களையும் தமிழிலேயே பரிமாறிக் கொள்ள இயன்ற வரை முயற்சி செய்வேன்” என கூட்டத்தினரின் பலத்த கரவொலிக்கிடையில் கமலநாதன் கூறினார்.
சிங்கப்பூர் அரசாங்கம் முரசு அஞ்சலை அதிகாரபூர்வமாகப் பயன்படுத்துவதற்கு முன்பாக, மலேசியக் கல்வி அமைச்சும், அதன் தேர்வு வாரியமும் முரசு அஞ்சல் மென்பொருளைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதையும் தனது உரையில் கமலநாதன் சுட்டிக் காட்டினார்.