கோலாலம்பூர் : மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாத் தொடரில் பன்னாட்டு இயங்கலை மாநாடு எதிர்வரும் 31 அக்டோபர் 2020 சனிக்கிழமை மாலை மணி 6:00 முதல் இரவு மணி 10:30 வரையில் நடைபெறவுள்ளது என்ற தகவலை ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ ப.கமலநாதன் தமது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியா உள்பட அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆசுத்திரேலியா, சப்பான், சிங்கப்பூர், மியான்மார், கம்போடியா, குவைத், தமிழ்நாடு போன்ற நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும் பேச்சாளர்களும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி இயங்கலை ஊடாக நடைபெறவுள்ளது. மொத்தம் 6 அமர்வுகளில் உரைகளும் படைப்புகளும் இடம்பெறவுள்ளன. தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளில் தமிழ்மொழி, தமிழ்க்கல்வி, பண்பாடு ஆகியவற்றின் தற்கால நிலைமை, வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்து அவர்கள் உரையாற்றவுள்ளனர்.
மேலும், தமிழ் மக்களிடையே மொழியின உணர்வையும் விழிப்புணர்வையும் சிந்தனை மாற்றத்தையும் ஏற்படுத்துவதன் மூலம், தமிழ்மொழியையும் தமிழ்க்கல்வியையும் அடுத்த கட்டத்திற்கு உயர்த்த முடியும்; அடுத்துவரும் தலைமுறைக்குக் கடத்த முடியும் என்று நம்புவதாக டத்தோ ப.கமலநாதன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
மலேசியாவில் தமிழ்க்கல்வி பன்னாட்டு மாநாடு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடகச் செய்தி கீழே வழங்கப்படுகிறது.