Home One Line P1 செல்லியல் பார்வை : மலேசியாவில் தமிழ்க் கல்வி – 204 ஆண்டு கால பயணம்

செல்லியல் பார்வை : மலேசியாவில் தமிழ்க் கல்வி – 204 ஆண்டு கால பயணம்

4066
0
SHARE
Ad

செல்லியல் பார்வை | 204 years journey of Tamil education in Malaysia | மலேசியாவில் தமிழ்க் கல்வி – 204 ஆண்டு கால பயணம் | 22 October 2020

(கடந்த 22 அக்டோபர் 2020-ஆம் நாள் செல்லியல் காணொலித் தளத்தில் “மலேசியாவில் தமிழ்க் கல்வி – 204 ஆண்டு கால பயணம” என்ற தலைப்பில் இடம்பெற்ற காணொலியின் கட்டுரை வடிவம்)

நம்மைக் கடந்து சென்ற அக்டோபர் 21-ஆம் தேதி மலேசியாவில் தமிழ் மொழியைப் பொறுத்தவரை ஒரு வரலாற்று நாள். 1816-ஆம் ஆண்டில் இதே நாளில்தான் பினாங்கு பிரீ ஸ்கூல் என்னும் பள்ளியில் மலேசியாவில் முதன் முதலாக தமிழ்க் கல்வி தொடங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அதுதான் அந்த தினத்தின் வரலாற்றுச் சிறப்பு.

2020-ஆம் ஆண்டுடன் 204 ஆண்டுகால வரலாற்றுப் பயணத்தை, தமிழ்க் கல்வி மலேசியாவில் நிறைவு செய்து தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது.

‘மலேசியத் தமிழ்க் கல்வி’ என்னும் பெயரில் இதற்கான சிறப்பு வலைத் தளம் உருவாக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. மலேசியத் தமிழ்க் கல்வி வரலாறு குறித்த பல அரிய தகவல்கள் அதில் இடம் பெற்றிருக்கின்றன.

அந்த வலைத்தளத்தில்,

மலேசியத் தமிழ்க் கல்வி ஆர்வலரும், பேராக் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளருமான சுப.நற்குணன்,

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் மேனாள் முகமை அமைப்பாளர் பாஸ்கரன் சுப்பிரமணியம்,

மலாயாப் பல்கலைகழகத்தின் முன்னாள் விரிவுரைஞர் சோ.சுப்பிரமணி

ஆகியோர் எழுதியிருக்கும் கட்டுரைகளில் இடம் பெற்றிருக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்த செல்லியல் பார்வை காணொலி உருவாகியிருக்கிறது.

மலேசியாவில் தமிழ்க் கல்வி கடந்து வந்த 204 ஆண்டு கால வரலாற்றுப் பயணத்திற்குள் இனி நுழைவோம்!

பினாங்கில் தொடங்கிய தமிழ்க் கல்வி

1816-ஆம் ஆண்டு காலகட்டத்தில் மலாயாவில் ஆட்சி நடத்திய பிரிட்டிஷார்  பினாங்கில் “பினாங்கு பொதுப்பள்ளி” அல்லது Penang Free School என்ற பள்ளியைத் தொடங்கினர்.

இந்தப் பள்ளியில்தான் முதன்முதலாக, நமது அன்னை மொழியாம் தமிழ் மொழிக்காக ஒரு தமிழ் வகுப்பு தொடங்கப்பட்டது. 21 அக்டோபர் 1816-ஆம் நாளன்று அன்றைய Penang Free School பள்ளியின் தலைவராக இருந்த சர் ரெவரண்டு அட்சிங்ஸ் (Rev.Hutcings) என்பவர் இந்தத் தமிழ் வகுப்பைத் தொடங்கியதாக வரலாறு கூறுகின்றது.

அன்று பினாங்கில் ஒற்றை வகுப்பறையில் தொடங்கிய தமிழ்க்கல்வி 204 ஆண்டுகளைக் கடந்து இன்று நாடு முழுவதும் ஆலம் விழுதுகளாகப் பெருகி 530 தமிழ்ப் பள்ளிகளாக உயர்ந்திருக்கிறது. இதில் சில பள்ளிகள் இன்னும் கட்டுமானத்திலும், உருவாக்க நிலையிலும் இருக்கின்றன.

பினாங்கு பிரி ஸ்கூல் தமிழ்க் கல்வி தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து 1834 இல் சிங்கப்பூரிலுள்ள ஃபிரி ஸ்கூலின் ஒரு பிரிவாக மற்றுமொறு தமிழ் வகுப்பு திறக்கப்பட்டது.

1850ஆம் ஆண்டில் மலாக்காவில் ஆங்கிலேய தமிழ்ப்பள்ளி ஒன்று நிறுவப்பட்டது. அதன் பின்னர், சிங்கப்பூரில் 1859இல் செயிண்ட் பிரன்ஸிஸ் சேவியர் மலபார் பள்ளியில் தமிழ் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து 1895ஆம் ஆண்டு தலைநகர், செந்தூலில் ஆங்கிலோ தமிழ்ப்பள்ளி நிறுவப்பட்டது. 1897இல் அது மெத்தடிஸ்ட் ஆண்கள் பள்ளியாக மாற்றம் கண்டது.

1898 ஆம் ஆண்டு சிரம்பான் ஜாவா லேன் தமிழ்ப்பள்ளி துவங்கப்பட்டது. 1900 ஆம் ஆண்டில் பேராக் மாநிலத்தில் பாகான் செராய் அரசினர்  தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டது.

தொழிலாளர் சட்டத்தால் பெருகிய தமிழ்ப் பள்ளிகள்

மலேசியத் தமிழ்க் கல்வி 204-ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் – முன்னாள் கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன்

இச்சூழலில் தமிழ்ப்பள்ளிகளின் கட்டாய வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்கியது 1912ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் அமல்படுத்தப்பட்ட (Labour Ordinance) தொழிலாளர் சட்டமாகும். ஒரு தோட்டத்தில் ஏழு முதல் பதினான்கு வயதிற்குட்பட்ட பத்துப் பிள்ளைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகம் அவசியம் பள்ளி ஒன்றனை நிறுவ வேண்டும் என இச்சட்டம் வலியுறுத்தியது.

இதனால் ஒரே நிர்வாகத்தின்கீழ் இயங்கும் தோட்டப் பிரிவுகளிலும் (Division) தனித்தனி பள்ளிகள் அமைக்கப்பட்டன. இதன் விளைவாக 1920ஆம் ஆண்டில் 122 தமிழ்ப்பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டன. புதிதாக தோற்றுவிக்கப்பட்ட இப்பள்ளிகளில் ஆசிரியர்களைப் பணியில் அமர்த்துவதும் தோட்ட முதலாளிகளின் கடமையாக இருந்தது.

நாட்டில் இரப்பர் தோட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கின. இந்தியாவிலிருந்து இந்தத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆங்கிலேயர்களால் வரவழைக்கப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினருக்காக இக்காலகட்டத்தில் திண்ணைப்பள்ளி அமைப்பில் தோட்டங்கள் தோறும் தமிழ்ப்பள்ளிகள் உருவாகின. தோட்டப் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி கற்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இவ்வகைப் பள்ளிகள் வீடுகளிலும் சில பொது இடங்களிலும் கூட செயல்பட்டன.

இடைநிலைப் பள்ளிகளிலும் தமிழ்

இவ்வாறாகத் தமிழ்ப் பள்ளிகளின் வழி பல்கிப் பெருகத் தொடங்கியது தமிழ்க்கல்வி.

தற்போது இடைநிலைப்பள்ளிகளில் ரிமூவ் வகுப்பு எனப்படும் புதுமுக வகுப்பு தொடங்கி படிவம் ஐந்து வரையிலும் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது.

இன்று பிடி3 (PT3) எனப்படும் மூன்றாம் படிவத்துக்கான தேர்வுகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்துப் படிக்கலாம். தேர்வு எழுதலாம்.

எஸ்.பி.எம் (SPM) எனப்படும் ஐந்தாம் படிவத் தேர்வுகளில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் என இரண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதனையும் ஆயிரக்கணக்கானோர், குறிப்பாகத் தமிழ்ப் பள்ளிகளில் இருந்து சென்றவர்கள் தேர்ந்தெடுத்துப் படிக்கின்றனர்.

எஸ்டிபிஎம் எனப்படும் ஆறாம் படிவத் தேர்வுகளிலும் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்துப் படிக்க முடியும். இதில் சிறந்த தேர்ச்சி பெற்றால் அதனை அடிப்படையாகக் கொண்டு உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பல மாணவர்கள் நுழைய முடிகிறது. தமிழ்மொழியில் சிறந்த புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழை முதன்மைப் பாடமாக பயிலும் வாய்ப்பும் வழங்கப்படுகின்றது.

இதுதவிர, இடைநிலைப் பள்ளிகளில் 15 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வம் காட்டினால் தாய்மொழிக் கல்வி (POL) முறையிலும் முழுநேரமாகவும் தமிழ் மொழி வகுப்பில் போதிக்கப்பட்டு வருகின்றது.

பல்கலைக்கழகங்களில் தமிழ்

நாட்டின் முதல் பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக்கழகத்தில் 1956 முதல், கலை சமூகவியல் புலத்தில் இந்திய ஆய்வியல் துறையின்கீழ் தமிழ் கற்பிக்கப்பட்டு வருகிறது.

இந்திய ஆய்வியல் துறையில் தற்காலத் தமிழ் இலக்கியம், சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம், இலக்கணம் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன.

மேலும், மலாய்மொழியில் தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகம், ஆகியவற்றைப் பற்றியும் கற்பிக்கப்பட்டு வருகின்றது. மலாயாப் பல்கலைக்கழகத்தின் மொழி, மொழியியல் புலத்தில் தமிழ்மொழியியலில் இளங்கலைப் பட்டப்படிப்பு 1998ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

பேராக் மாநிலத்தில் தஞ்சோங் மாலிம் நகரில் அமைந்துள்ள சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம், புத்ரா பல்கலைக்கழகம், சபா மலேசிய பல்கலைக்கழகம் ஆகிய அரசுப் பல்கலைக்கழகங்களில் இரண்டாம் மொழியாக தமிழ் கற்பிக்கப்படுகிறது.

1996ஆம் ஆண்டு முதல் புத்ரா பல்கலைக்கழகத்தில் வேற்றுமொழித் துறையில் (Jabatan Bahasa Asing) தமிழ் ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்ப் பள்ளி மாணவர்களின் சாதனை

தமிழ்க்கல்வியின் சாதனை தமிழ்ப்பள்ளிகளோடு நின்றுவிடவில்லை.

இடைநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, ஆசிரியர் கல்விக்கழகம், பல்கலைக்கழகம் வரையில் தமிழ்க்கல்வியைப் பயிலும் நிலை இன்று கைகூடி உள்ளது.

பாலர் பள்ளித் தொடங்கி முனைவர் பட்டம் வரையில் தமிழ்மொழியைப் படிக்கும் வாய்ப்பையும் உரிமையையும் மலேசியத் தமிழர்களாகிய நாம் பெற்று இருக்கிறோம்.

தமிழ் இடைநிலைப் பள்ளி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இன்றைக்கு தமிழ்ப் பள்ளி மாணவர்கள் அனைத்துலக அளவிலான அறிவியல், புத்தாக்கம், இலக்கியம், நாடகம், மொழி போன்ற பன்முகத் துறை சார்ந்த போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றிகளை ஈட்டி வருகின்றனர். உலகின் எந்த இனத்தவருக்கும் நிகரானவர்கள் தமிழ் மாணவர்கள் என்பதை நிரூபித்து வருகின்றனர்.

தமிழ் மொழியின் மூலம் கற்றாலும் உலகின் எந்த மொழிக்கும் இணையாகப் போட்டியிட்டு அறிவாற்றலால் வெல்லலாம் என்பதற்கான எடுத்துக் காட்டாகவும் திகழ்கின்றனர் நம் தமிழ்ப் பள்ளி மாணவர்கள்.

தமிழ்ப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும், பல பன்னாட்டு நிறுவனங்களிலும் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர். பல துறைகளில் சாதனையாளர்களாகத் திகழ்கின்றனர்.

இதற்கெல்லாம் வித்திட்டது மலேசியாவில் 204 ஆண்டுகளுக்கு முன்னர் எளிமையாகத் தொடங்கிய தமிழ்க் கல்விதான்.

மலேசியத் தமிழ்க் கல்வி 200-ஆம் ஆண்டு விழா 2016-இல் கொண்டாடப்பட்டபோது அப்போதைய பிரதமர் நஜிப் துன் ரசாக் தமிழில் நினைவுப் பட்டயத்தில் கையெழுத்திட்ட காட்சி

இந்தியா, தமிழ்நாடு, இலங்கை முதலான தமிழின் தாய்நிலத்திற்கு வெளியே கடல் கடந்த ஒரு நாட்டில் கடந்த 204 ஆண்டுகளாகத் தமிழ்மொழியும் தமிழ்க்கல்வியும் நீடித்து தொடர்ந்து வருவது மலேசியாவில் மட்டும் தான் என நாம் பெருமையுடன் கூறிக் கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல் தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாட்டு, சமய வளர்ச்சிக்கும் தமிழ்ப்பள்ளிகளின் பங்களிப்பு அளவிட முடியாதது.

நமது நாட்டில் கால ஓட்டத்தில் வார, மாத இதழ்களும்  நாளிதழ்களும் பல்கிப் பெருகி தமிழ் மொழியை மேலும் வளர்த்தெடுத்தன. மலேசியத் தமிழ் இலக்கியத்தின் செழுமைக்கும் அதனுள் விரிந்து, பரந்து கிடக்கும் படைப்புகளுக்கும் காரணமும் தமிழ்க் கல்விதான்.

நாட்டில் 24 மணி நேர ஒலிபரப்பை வழங்கும் வானொலிகள் இயங்குவதற்கும், உள்நாட்டு அலைவரிசைகளோடு பல தமிழ் அலைவரிசைகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாவதற்கும் அடித்தளமிட்டது தமிழ்க் கல்விதான் என்பதையும் நாம் மறந்து விட முடியாது.

இதன் மூலம் தமிழ் மொழியின் பயன்பாடும் தமிழை நன்கறிந்தவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் அதிகரித்திருக்கின்றன.

தமிழ்க் கல்வி நிலைத்திருக்க அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்களின் பங்களிப்பு

204 ஆண்டு கால தமிழ்க் கல்வியின் வளர்ச்சிக்கு மலேசிய இந்தியர் காங்கிரஸ் போன்ற அரசியல் அமைப்புகளும் சமுதாய இயக்கங்களும், தனிநபர்களும் வழங்கியிருக்கும் பங்களிப்பும் முக்கிய காரணமாகும்.

ஒவ்வொரு முறையும் தமிழுக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் தமிழ்க்கல்விக்கும் நம்  நாட்டில் ஆபத்து வருவது போல இருந்தால் முதலில் குரல் கொடுப்பவர்கள் இத்தகைய அரசியல் கட்சிகளும், தமிழ் சமுதாய இயக்கங்களும்தான்.

எல்லாவற்றுக்கும் மேலாக இத்தனை ஆண்டு கால தமிழ்க் கல்வி தொடர்ச்சிக்கு நாம் மலேசிய அரசாங்கத்திற்கு நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும். 1957ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்த பிறகு மற்ற பள்ளிகளைப் போலவே தமிழ்ப்பள்ளிகளையும் நம் அரசாங்கம் பாதுகாத்து பராமரித்து வருகின்றது. தமிழ்க்  கல்விக்கு உரிய இடத்தையும் அங்கீகாரத்தையும் வழங்கியிருக்கிறது.

வாழ்க தமிழ்; வளர்க தமிழ்க்கல்வி.