Home One Line P1 “மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழா” – ப.கமலநாதன் வாழ்த்துச் செய்தி

“மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழா” – ப.கமலநாதன் வாழ்த்துச் செய்தி

2241
0
SHARE
Ad

(மலேசியாவில் முதன் முதலாக 21 அக்டோபர் 1861-ஆம் நாள் பள்ளிவழி தமிழ்க் கல்வி கற்பித்தல் தொடங்கப்பட்டது. 204 ஆண்டுகளை மலேசியாவில் தமிழ்க் கல்வி வெற்றிகரமாகக் கடந்திருப்பதை முன்னிட்டு “மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழா” ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் முன்னாள் கல்வி துணையமைச்சருமான டத்தோ ப.கமலநாதன் வழங்கிய வாழ்த்துச் செய்தி)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு 

அன்பார்ந்த தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களே,

#TamilSchoolmychoice

இடைநிலைப்பள்ளித் தமிழ்மொழி பாடக்குழுத் தலைவர்களே,

தமிழ்ப்பள்ளி; இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களே மற்றும் மாணவ மணிகளே,

உங்கள் அனைவருக்கும் நற்றமிழ் வணக்கம்.

மலேசிய மண்ணில் 204வது அகவையினை நிறைவு செய்து இன்னமும் சீர்மிகு இளமையோடு உலா வரும் அன்னை தமிழ்க் கல்விக்கு விழாக் கோலம் காணும் இந்த நல்லதொரு சூழலில் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

1816ஆம் ஆண்டு பினாங்கு Free School ஆங்கிலப் பள்ளியில், ஒரு தமிழ் வகுப்பாக அக்டோபர் திங்கள் 21 ஆம் நாள் மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்ட அந்நாள், இன்றைய நிலையில் 525 தமிழ்ப்பள்ளிகளின் உருவாக்கத்திற்கும் செயலாக்கத்திற்கும் வித்திட்ட பொன்னாள் ஆகும்.

தமிழ்ப்பள்ளிகளில் மட்டுமல்லாது பாலர் பள்ளி தொடங்கி, இடைநிலைப் பள்ளி, உயர் நிலைப்பள்ளி, ஆசிரியர் கல்விக் கழகங்கள், பல்கலைக்கழகங்களில் முனைவர் படிப்பு வரை தமிழ்மொழி கற்பிக்கப்படும் நிலையைக் காண்கையில், நமது மலேசிய மண்ணில் தமிழ்மொழி ஆலமரத்தின் விழுதுகள் போல் வேரூன்றியும் தழைத்தோங்கியும் நிற்கிறது எனலாம். இந்த வளர்ச்சிக்காகப் பாடாற்றிய நமது நாட்டின் தமிழின முன்னோர்களையும் சான்றோர்களையும் நினைவில் கொண்டு போற்றிடும் களமாகவும் நமது கொண்டாட்டங்கள் அமைதல் வேண்டும்.

2016ஆம் ஆண்டு, அன்றைய மலேசிய அரசாங்கத்தின் நிறைவான ஆசியோடும் ஆதரவோடும், கல்வி அமைச்சின் முழு ஒத்துழைப்போடும் 200ஆம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளைப் பெரும் விமரிசையாக நடத்தி தமிழன்னைக்கு மகுடம் சூட்டினோம்.

இன்றைய நிலையில், கோவிட் 19 பெருந்தொற்றால் உலகமே பாதிப்புக்குள்ளாகிய நிலையில், அன்னை தமிழுக்கான விழா எந்த சூழலிலும் தடைபடலாகாது என்ற உந்துதலின் காரணமாக 204ஆம் ஆண்டு விழா அனைத்தும் இயங்கலை வாயிலாக நடத்திட முனைந்தோம். நாங்கள் எதிர்ப்பார்த்ததை விட தமிழ் அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், தமிழாசிரியப் பெருமக்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், தமிழ் அறிஞர்கள், தலைவர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என தமிழுணர்வுமிக்க அனைத்து தரப்பினரும் வழங்கி வரும் ஆதரவு மெய்சிலிர்க்க வைக்கிறது.

இத்தருணத்தில், இந்த ஏற்பாடுகளில் எங்கள் பங்களிப்பும் இருத்தல் அவசியமென கருதி இணை ஏற்பாட்டாளர்களாக இணைந்த மலேசிய தமிழாசிரியர் சங்கத்தினருக்கும், மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் சங்கத்தினருக்கும் நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவிப்பதில் பெரும் மகிழ்சியடைகிறேன்.

இயங்கலை வழி பள்ளி மாணவர்களுக்கு பல போட்டிகளும், பெரியவர்களுக்கான விவாத மேடையும், அனைத்துலக ரீதியிலான பன்னாட்டு தமிழ்க்கல்வி மாநாட்டு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சிறப்பான ஆதரவு கிடைத்து வருவது பாராட்டுக்குரியது.

நமது தமிழ்ப்பள்ளிகள், அன்றுதொட்டு இன்று வரை , கல்விக்கூடங்களாக மட்டுமல்லாது நமது கலை கலாச்சார பாரம்பரியங்களை போற்றி வழி நடத்திவரும் பண்பாட்டு நடுவங்கள் என்ற நிலையில், நமது 204ஆம் ஆண்டு தமிழ்க்கல்வி விழா நடைபெறுகிறது.

தமிழ்ப்பள்ளிகள் யாவும் அக்டோபர் 19 ஆம் தொடங்கி 23 ஆம் நாள் வரை, தங்கள் பள்ளிகளின் சூழலுக்கேற்ப தமிழ்மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்திட வேண்டுகிறோம். மேலும், இனி ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தை தமிழ்மொழி மாதமாக பிரகடனப்படுத்தி, தமிழ்மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை மலேசிய தமிழ்ப்பள்ளிகள் யாவும் முன்னெடுக்க வேண்டும் என்பது எங்களின் அவா.

இவ்வேளையில் நம் நாட்டில் தமிழ்மொழி நிலையாக நீடித்து இருப்பதற்கு காரணமாக இருந்த தமிழாசிரியர் சமூகத்திற்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்க்கல்வியைத் தெரிவுசெய்த பெற்றோருக்கு நன்றியினைக் கூறுவதோடு தமிழைக் கற்கும் மாணவர்கள் அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம் அமைய எனது ஆசிகளைக் கூற விரும்புகிறேன்; இறைவனின் திருவருளை வேண்டிக் கொள்கிறேன்.

அமுதான தமிழை அடுத்த தலைமுறையினருக்கு இட்டுச்செல்லும் பணியினை அனைவரும் தொடர்ந்து முன்னெடுப்போம்.

தமிழின் எழுச்சி தலைமுறை வளர்ச்சி.

நன்றி வணக்கம்.