கோலாலம்பூர், மார்ச் 15 – ஓரினப் புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுகள் தண்டனை பெற்று சுங்கை பூலோ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக அவரது இளைய மகள் நூருல் நூஹா (படம்) கவலை தெரிவித்துள்ளார்.
அன்வார் இப்ராகிமின் விடுதலைக்காக செயல்பட்டு வரும் இயக்கத்திற்கு நூருல் நூஹா தலைமையேற்றுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்வாரின் ரத்த அழுத்தம் குறைந்து வருவதாக குறிப்பிட்டார். மேலும் அவரது உடல் எடை ஒரே மாதத்தில் 3 கிலோ குறைந்துவிட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
வெள்ளிக்கிழமை அன்று தமது தந்தையை இரண்டாவது முறையாக சிறையில் சந்தித்துப் பேசியதாகக் குறிப்பிட்ட அவர், சிறையில் உள்ள சங்கடங்கள் குறித்து தனது தந்தை எத்தகைய உணர்வையும் வெளிக்காட்டாமல் பேசியதாகத் தெரிவித்தார்.
“சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ள பகுதியில் அதிக வெப்பம் நிலவுகிறது. இதனால் அவர் சிரமப்பட்டாலும், என்னிடம் அதை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அவர் வழக்கம்போல் தனது போராட்ட உணர்வு சிறிதும் குறையாத வகையிலேயே பேசினார். சிறையில் அவருக்கு கூடுதலான சத்துணவுகள் ஏதும் வழங்கப்படுவது இல்லை என அறிகிறேன்,” என்றார் நூருல் நூஹா.
அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற “கித்தா லவான்” பேரணியில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பங்கேற்றது குறித்து அன்வார் மகிழ்ச்சி தெரிவித்ததாக குறிப்பிட்ட அவர், சிறையில் இருந்தாலும் கூட தமது தந்தை நாட்டு நடப்புகள் அனைத்தையும் அறிந்து வைத்துள்ளதாகக் கூறினார்.