லாகூர் (பாகிஸ்தான்), மார்ச் 15 – கூட்டம் நிறைய இருந்த இரண்டு கிறிஸ்துவ தேவாலயங்களின் மீது தலிபான் தீவிரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் இதுவரை 15 பேர் உயிர்ப்பலியாகி இருப்பதாகவும், மேலும் 78 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடந்த தேவாலயங்களுள் ஒன்று – குண்டு வெடிப்புக்குப் பின்னர்….
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லாகூர் நகரில் கிறிஸ்துவர்கள் அதிகமாக வாழும் பகுதியில் இந்த இரண்டு தேவாலயங்களும் அமைந்துள்ளன.
யாவுஹான் பாட் என்ற பகுதியில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றும், கிறிஸ்ட் சர்ச் எனப்படும் தேவாலயமும்தான் இந்த தாக்குதலுக்கு உள்ளாகின. தற்கொலைப் படையினர் வெடிகுண்டை வெடிக்கச் செய்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமையாதலால், இரண்டு தேவாலயங்களிலும் பிரார்த்தனைக்காக அதிகமானவர்கள் குழுமியிருந்தனர். தாக்குதலைத் தொடர்ந்து நடந்த அமளியில் பலர் தங்களின் உயிரைக் காத்துக் கொள்ள அங்கும் இங்கும் ஓடினர்.
மரணமடைந்தவர்களின் காவல் துறையினரும் அடங்குவர். காயமடைந்தவர்களில் பெண்களும், குழந்தைகளும் இருந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(மேலும் செய்திகள் தொடரும்)