Home நாடு அரசியல் பார்வை: இன்னும் எத்தனை நாள் தாக்குப் பிடிப்பார் நஜிப்?

அரசியல் பார்வை: இன்னும் எத்தனை நாள் தாக்குப் பிடிப்பார் நஜிப்?

749
0
SHARE
Ad

najibகோலாலம்பூர், மார்ச் 16 – அரசியல் ரீதியாக பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தலைமைத்துவத்தை முடிவுக்குக் கொண்டு வர அம்னோவில் அவரது அரசியல் எதிரிகள் வாளை உருவிக் கொண்டு காத்திருப்பது வெளிப்படையாகத் தெரிந்து விட்ட நிலையில், இன்னும் எத்தனை நாள் அவர் பிரதமராக நீடிப்பார்? இந்த அரசியல் சதிராட்டத்தில் அவரால் தப்பித்து மீண்டு வர முடியுமா? என்பது போன்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளன.

1எம்டிபி தொடர்பான சர்ச்சைகளில் அந்நிறுவனத்தின் தலைவரான நஜிப்பை நோக்கியே அத்தனை விரல்களும் நீட்டப்பட்டிருக்கும் இந்த காலகட்டத்தில், கடந்த சனிக்கிழமை “எந்தவொரு தவறையும் தாம் மன்னிக்கப் போவதில்லை என்றும், எதிலும் சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படும்” அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

“யாராக இருந்தாலும் சட்ட நடவடிக்கை” – நஜிப் 

#TamilSchoolmychoice

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

mahathir-forehead1கெடா அம்னோ மாநாட்டை சனிக்கிழமை அலோர்ஸ்டாரில் தொடக்கி வைத்த அவர், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு எப்போதுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

“பிரதமர் என்ற முறையிலும், கட்சித் தலைவர் என்ற முறையிலும், எப்போதுமே கட்சி மற்றும் நாட்டின் நலன் கருதி என்னால் இயன்றதைச் செய்வேன். ஏதேனும் பிரச்சினை இருக்கிறது எனில், நாம் அனைவரும் இணைந்து நின்று அதைக் கடந்து வருவோம். ஏதேனும் விவகாரம் இருக்கிறது எனில், அதை நாம் இணைந்து எதிர்கொண்டு சமாளிப்போம்” என்றும் நஜிப்.

“நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் எனில், அவ்வாறே இருப்போம். ஏதேனும் தவறு காணப்பட்டால், அதை சரிசெய்வோம். சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுத்து சட்டத்தின் ஆட்சியை நாம் நிலைநிறுத்துவோம்,” என்றும் பிரதமர் நேற்றைய கெடா அம்னோ கூட்டத்தில் முழங்கியுள்ளார்.

அவர் 1எம்டிபி பிரச்சனை குறித்துதான் இவ்வாறு கூறியுள்ளார் என்றாலும் அந்த நிறுவனம் பற்றி எல்லாக் குற்றச்சாட்டுகளும் நஜிப்பைக் குறிவைத்துத்தான் கூறப்படுகின்றன.

மொய்தீன் மகள் திருமணத்திற்குப் பின்னர் அம்னோவில் தலைமைத்துவப் போராட்டமா?

எதுவுமே நடக்காததுபோல் நஜிப் உறுதியுடனும், தெளிவாக இருப்பது போன்றும் நடந்து கொண்டாலும், இதுவரை காணாத அளவுக்கு கடும் நெருக்கடியை அவரது தலைமைத்துவம் எதிர்நோக்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

நஜிப் அவரது திரண்ட குடும்ப சொத்துக்கள் எப்படி வந்தது என்பது குறித்து அறிவிக்க வேண்டும் என மகாதீர் பகிரங்கமாக கேள்விக் கணை தொடுத்துள்ளார்.Tan-Sri-Muhyiddin-Yassin2-1

நஜிப்பை வீழ்த்துவதற்கு கங்கணம் கட்டிக் கொண்டு மகாதீர் செயல்படுவதும், நஜிப்புக்கு எதிரான கும்பலுக்கு மகாதீர்தான் வியூகதாரியாக தலைமை தாங்குகின்றார் என்பதும் அனைவருக்கும் தெரிந்த இரகசியங்கள்தான்!

இம்மாத இறுதியில் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் மகளின் திருமணம் நடைபெறவிருப்பதால், நஜிப்புக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் மொய்தீன் இதுவரை நேரடியாக இறங்காமல் இருந்து வருகின்றார்.

இருப்பினும், அண்மையில் நஜிப் கூட்டிய அம்னோ தொகுதி தலைவர்களின் ஆதரவுக் கூட்டத்தில் மொய்தீனும், கெடா மந்திரி பெசார் முக்ரீஸ் மகாதீரும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தது அம்னோவின் தற்போதைய நிலைமையைத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஜோகூர் மந்திரி பெசார் காலிட் நோர்டினும் மொய்தீனுக்கு ஆதரவாகக் களத்தில் நிற்கின்றார் என்றும் கூறப்படுகின்றது.

தனது மகளின் திருமணம் முடிந்ததும் தனது நிலைப்பாட்டை மொய்தீன் தெரிவிப்பார் என்றும் அப்போதுதான் உண்மையான அரசியல் காய் நகர்த்தல்கள் அம்னோ அரங்கில் அரங்கேறும் என்றும் அம்னோ வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

மொய்தீன் மகளின் திருமணத்தில் நஜிப்பும் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மொய்தீன் பிரதமர் – ஹிஷாமுடின் துணைப் பிரதமரா?Hishamuddin_Hussein12ஒரு சமாதான உடன்படிக்கையாக, மொய்தீன் அடுத்த பிரதமராக நஜிப் வழிவிட்டு ஒதுங்க வேண்டும் என்றும், அதற்குப் பிரதிபலனாக நஜிப்பின் ஒன்றுவிட்ட சகோதரரும், தற்காப்புத் துறை அமைச்சருமான ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் துணைப் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் பின்னணியில் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் பத்திரிக்கை ஆரூடங்கள் தெரிவிக்கின்றன.

2018க்குள் நடைபெறவிருக்கும் அடுத்த 14வது பொதுத் தேர்தலை புதிய அம்னோ தலைவர் தலைமையேற்று நடத்த வேண்டும் என்ற நோக்கிலும் அதற்கு முன்னோடியாக தன்னையும் தனது கொள்கைகள், திட்டங்கள் என்ன என்பது குறித்து புதிய தலைவர் வியூகங்கள் வகுப்பதற்கு ஏதுவாகவும், இந்த ஆண்டிலேயே தலைமைத்துவ மாற்றம் நடைபெற வேண்டும் என்றும் அம்னோவில் ஒரு சில தரப்பினர் முயற்சிகள் மேற்கொண்டிருக்கின்றனர்.

அல்தான்துன்யா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதி சைருல் ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு பேசி வரும் சில விவகாரங்களும் கூட நஜிப்புக்கு எதிராக திரும்பியுள்ளன.

எனவே, நஜிப்பை வீழ்த்துவதற்கு அம்னோவில் தொடங்கப்பட்டுள்ள போராட்டத்தில் அவர் இன்னும் எத்தனை நாளைக்கு தாக்குப் பிடிப்பார் என்பதுதான் மலேசிய அரசியல் அரங்கில் தற்போது பரபரப்பாக உலவி வரும் கேள்வியாகும்!

-இரா.முத்தரசன்