மார்ச் 25 – ஆமணக்கு, இலை, விதை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன்களை உள்ளடக்கியவை. இதன் விதையில் எண்ணெய் தயாரிப்பர். விதைகளை அதிக அழுத்தம் கொண்டு பிழிந்தும், விதைகளைப் பொடித்து நீரிலிட்டுக் காய்ச்சி மேலே மிதந்து வரும் எண்ணெயை சேமித்தும் ஆமணக்கு எண்ணெய் தயாரிப்பர்.
இரண்டாவதாகச் சொல்லப்பட்ட முறையில் தயாரித்த எண்ணெய் மருத்துவத்துக்கு உகந்ததாக அமையும். இதை விளக்கெண்ணெய் என்று அழைப்பதுண்டு. இது விளக்கெரிக்க உபயோகப் படுவதுடன் மருந்தாகவும் பயன்படுகிறது.
சிறியவர் முதல் முதியவர் வரை வயிற்றை சுத்தப்படுத்தக் கொடுக்க கூடியது ஆமணக்கு. தோல் நோய்களைப் போக்க பயன்படுகின்றது. விளக்கெண்ணெய் சிறிது கசப்பும் தன்மை உடையது.
எனினும் நீர்சுருக்கு, மலச்சிக்கல், முகவாதம், பக்கவாதம், வாயு, ஆகியவற்றைக் குணப்படுத்தும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது. விளக்கெண்ணெய் குழந்தைகளைத் தாயைப் போல பேணிக்காக்கும் தன்மையுடைது.
அலங்காரப் பொருள்களில், தோல் பராமரிப்பு மருந்துகளிலும், உதட்டுச் சாயங்களான லிப்ஸ்டிக்களில் 81 சதவீத அளவுக்கும், ஆமணக்கெண்ணெய் பயன்படுத்தப்படுகின்றது.
இதிலுள்ள ரிசினோலிக் ஆசிட் என்னும் வேதிப் பொருளின் மருத்துவ குணம் அறிந்து இது பயன்படுத்தப் படுகின்றது. விளக்கெண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் அதன் சக்கை தாவரங்களுக்கான சிறந்த உரமாக விளங்குகின்றது.
ஆமணக்கு எண்ணெய், இலைகள், வேர், விதை, காய்கள் அத்தனையும் மருந்தாகப் பயன் தருகின்றன. ஆமணக்கு எண்ணெயில் கொழுப்பு சத்து 42-55 சதவீதமும், புரதச்சத்து 20-25 சதவீதம் வரையிலும் லெக்டின் என்னும் வேதிப் பொருள் 0.1-0.7 சதவீதமும் அடங்கியுள்ளன.
ஆமணக்கின் மருத்துவப் பயன்கள்:-
ஆமணக்கெண்ணெய் பொதுவாக வயிற்றைச் சுத்தம் செய்வதற்காகவும், வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றுவதற்காகவும் பயன்படுத்தப்டுகின்றது. ஆயுர்வேத மருத்துவத்தில் வாயுத் தொல்லைகளை விலக்க உதவுகின்றது.
ஆமணக்கு கனி வேர்ப்பகுதி வாயுக் குற்றங்களைப் போக்கச் செய்யும் தைலங்களிலும் குடிநீரிலும் பயன்படுத்தப்படுகிறது. வேரைக் குடிநீர் செய்து, காலை, மாலை என இருவேளையாகக் கொடுக்க ஒரு வாரத்தில் வாத நோய்களை குணமாகும்.
ஆமணக்கு வேர்க்குடிநீர் மூட்டுவலிகள், சிறுநீர்ப்பை வலிகள், கீழ்முதுகுவலி, வயிற்றுக் கோளாறுகள், வீக்கங்கள் ஆகியவற்றைத் தணிக்க செய்யும் அற்புத மருந்தாகும். ஆமணக்கு இலையும் உள் மருந்தாகவும், வெளி மருந்தாகவும் பயன்படுகின்றது.
வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றுவதற்கும், சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் வலி மற்றும் அடைப்பு ஆகியவற்றை குணப்படுத்தவும், மூட்டு வலிகளை குணப்படுத்தவும், ஆறாப் புண்களை ஆற்றவும் பயன்படுகின்றது.
ஆமணக்கு விதைகள் மலச்சிக்கலை உடைக்கவும், மூட்டு வலிகளை குணப்படுத்தவும், ஈரல் மற்றும் மண்ணீரல் நோய்களை குணப்படுத்தவும், மூலம் மற்றும் கீழ்முதுகு வலியைத் தணிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. *