Home இந்தியா மோடி நாளை பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!

மோடி நாளை பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!

387
0
SHARE
Ad

modiபுதுடெல்லி, ஏப்ரல் 8 – பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் வட அமெரிக்காவின் கனடா ஆகிய நாடுகளுக்கு 8 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

முதல் கட்டமாக அவர் நாளை (வியாழக்கிழமை) பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்கு அவர் 3 நாட்கள் இருப்பார். ஐரோப்பிய நாடுகளுக்கு மோடி பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை காலை பிரான்ஸ் புறப்படும் மோடி நள்ளிரவில் தலைநகர் பாரீஸ் சென்றடைகிறார். மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலையில் அவருக்கு பிரான்ஸ் அரசாங்கம் சார்பில் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

அப்போது அந்நாட்டின் அதிபர் பிரான்கோய்ஸ் ஹாலண்டேவுடன் முறைப்படி மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். அன்று மாலை இருநாடுகளின் தலைவர்களும் செய்தியாளர்களை கூட்டாக சந்திக்கின்றனர். இதேபோல் அன்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் மோடிக்கு வரவேற்பும் அளிக்கப்படுகிறது.

முன்னதாக அவருக்கு அளிக்கப்படும் மதிய உணவு விருந்தின்போது பிரான்சின் முக்கிய அரசியல் தலைவர்களையும், அதிகாரிகளையும் அவர் சந்தித்து பேசுகிறார். பிரான்சில் தங்கியிருக்கும் போது, யுனெஸ்கோ தலைமையக நிகழ்ச்சியிலும் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

வருகிற சனிக்கிழமை வரலாற்றுச் சிறப்புமிக்க டுலூஸ் நகருக்கும் அவர் செல்கிறார். அங்கு ஏர்பஸ் நிறுவன தலைமையகத்தை பார்வையிடுகிறார். ஞாயிற்றுக்கிழமை லில்லி நகரில் உள்ள முதலாம் உலகப்போர் நினைவிடத்துக்கும் மோடி செல்கிறார்.

இந்த நினைவிடம் இந்திய போர் வீரர்களின் தியாகங்களையும் பின்னணியாகக் கொண்டதாகும். பின்பு அங்கிருந்து பாரீஸ் நகருக்கு திரும்பும் அவர் பயணத்தின் 2–ஆம் கட்டமாக அன்று பிற்பகலில் ஜெர்மனிக்கு புறப்படுகிறார்.

தனது பிரான்ஸ் பயணத்தின்போது பிரதமர் மோடி அந்நாட்டு நிறுவனங்களுடன் இந்திய ராணுவத்துக்கு தேவைப்படும் தளவாடங்களைத் தயாரிப்பதற்கான முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற முழக்கத்தை நிறைவேற்றும் விதமாக ராணுவ துறையில் ஒப்பந்தங்கள் செய்துகொள்வது மோடியின் பிரான்ஸ் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தவிர, விண்வெளி, சுற்றுலா, தீவிரவாத தடுப்பு பயிற்சி ஆகியவற்றில் ஒத்துழைத்து செயல்படுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் இரு நாடுகளும் கையெழுத்திடுகின்றன. பிரான்சில் தங்கியிருக்கும்போது பிரதமர் மோடி அந்நாட்டின் பிரபல தொழில் அதிபர்களையும் அழைத்துப் பேசுகிறார்.

அப்போது மென்பொருள் மற்றும் தகவல் தொழில் நுட்பம், வேளாண், வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு துறைகளில் முதலீடு செய்ய இந்தியா வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுப்பார். தனது 3 நாடுகளின் பயணம் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாக அமையும் என்று ஏற்கனவே மோடி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.