Home நாடு நஜிப் கொடுத்த வாக்குறுதியை மீறிவிட்டார் – மகாதீர்

நஜிப் கொடுத்த வாக்குறுதியை மீறிவிட்டார் – மகாதீர்

453
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 13 – பிரதமர் நஜிப் துன் ரசாக் தனக்கு கொடுத்த வாக்குறுதியை மீறிவிட்டார் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் குற்றம் சாட்டியுள்ளார்.

நஜிப்பின் தொலைக்காட்சி பேட்டி வெளியான இரு தினங்களுக்குப் பின்னர் மகாதீர் அளித்துள்ள பேட்டி ஒன்று ஐந்து பகுதிகளாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Dr-Mahathir-Mohamed

#TamilSchoolmychoice

அதில் பிரதமர் நஜிப் குறித்து மீண்டும் பல கடுமையான விமர்சனங்களை அவர் முன் வைத்துள்ளார். நஜிப் மீது தாம் முன்பு மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

“பாக்லா (அப்துல்லா படாவி) பதவி விலகிய பின்னர் நஜிப் தான் எனது நம்பிக்கையானவராக இருந்தார். சிங்கப்பூர் எதிர்த்தாலும் கூட ஜோகூர்பாரு, சிங்கை இடையே பாலம் கட்டப்போவதாக நஜிப் என்னிடம் உறுதியளித்தார். ஆனால் அவ்வாறு செய்யவில்லை,” என்றார் மகாதீர்.

கொடுத்த வாக்குறுதியை நஜிப் மீறியதால் தாம் மிகுந்த அதிருப்தி அடைந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், பாலம் கட்டுவது என்பது மலேசியாவின் இறையாண்மை அடிப்படையிலான உரிமை என்று தெரிவித்துள்ளார்.

“சிங்கப்பூர் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அது என் தவறல்ல. அதேசமயம் பாலம் கட்டுவதென்பது மலேசிய இறையாண்மை அடிப்படையிலான உரிமை. அது நமக்குச் சொந்தமான பகுதி. நமக்குச் சொந்தமான நீர். நாம் ஒன்றும் சிங்கப்பூர் பகுதியை அணுகி இதைச் செய்யவில்லை.

“சிங்கப்பூருடன் ஓர் ஒப்பந்தம் கண்டிருப்பதாக அவர் (நஜிப்) கூறினார். நமது சுதந்திரம் எங்கே போனது? நாம் என்ன சிங்கப்பூரின் ஒரு பகுதியா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் மகாதீர்.

தம் மீதான மகாதீரின் கடும் விமர்சனங்களுக்கு சிங்கப்பூருக்கு பாலம் அமைக்காததால் ஏற்பட்ட கோபமும் ஒரு காரணமாக இருக்கலாம் என அண்மைய தொலைக்காட்சிப் பேட்டியில் நஜிப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே 1எம்.டி.பி., குறித்தும் தனது புதிய பேட்டியில் மகாதீர் கருத்து தெரிவித்துள்ளார்.

“மக்களுக்கு இலவசமாக பணம் கொடுப்பது பிரச்சினைகளுக்கான சரியான விடையல்ல. போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும், நல்ல கல்வியை அளிப்பதும்தான் நாட்டின் தேவையாக உள்ளது.

“மக்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். நல்ல கல்வியை அளித்து, பயிற்சியும் தருவதன் மூலம் அவர்களால் பணம் சம்பாதித்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்,” என்றார் மகாதீர்.

1எம்.டி.பி., நிறுவனம் குறித்த விசாரணையை முடிக்க பல ஆண்டுகளாகும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அடுத்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியை தோல்வியில் இருந்து தற்காக்க வேண்டுமானால் நஜிப் இப்போதே பதவி விலகுவது நல்லது என்று தெரிவித்தார்.