Home நாடு சைருலுக்கு உதவ நினைக்கிறேன் – மகாதீர்

சைருலுக்கு உதவ நினைக்கிறேன் – மகாதீர்

581
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 13 – அல்தான் துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சைருல் விவகாரத்தை அரசியல் ஆதாயங்களுக்காக துன் மகாதீர் பயன்படுத்துவதாக கருத்து எழுந்துள்ள நிலையில், தனது முன்னாள் மெய்க்காப்பாளருக்கு உதவி செய்வது மட்டுமே தமது நோக்கம் என அவர் கூறியுள்ளார்.

அண்மைய பேட்டி ஒன்றில், அரசியல் ஆதாயம் தேடுவது தமது நோக்கமல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், அல்தான் துயாவை கொலை செய்யும்படி சைருலுக்கு உத்தரவிட்டது யார் என்பதை அதிகாரிகள் கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Mahathir

#TamilSchoolmychoice

“நீண்ட காலமாக இந்த வழக்கு குறித்து நான் ஏதும் பேசவில்லை. ஆனால் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள முன்னாள் காவல்துறை அதிகாரிகள் இருவருக்கு நாம் உதவ வேண்டும், அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

“சைருல் ஒரு காலத்தில் எனது மெய்க்காப்பாளராக இருந்தவர். தற்போது சிக்கலில் உள்ளார். இதுகுறித்து நான் பேசினால், நான் எதிர்த்தரப்புடன் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இது ஒரு மனிதனின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது.”

“ஒருவேளை நீங்கள் செய்யாத ஒரு குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு, யாருமே உங்களுக்கு உதவவில்லை என்றால் எப்படி இருக்கும்? என்னையும் அதுபோன்று இருக்கச் சொல்கிறீர்களா?” என்று மகாதீர் கேள்வி எழுப்பி உள்ளார்.

கொலை செய்யுமாறு தனக்கு உத்தரவிட்டது யார்? என சைருல் தெரிவிக்க விரும்பாவிட்டால், அவரை யாரும் வற்புறுத்தக் கூடாது என்று குறிப்பிட்டுள்ள மகாதீர், அவர் கொலை செய்தது உண்மை என்றால், அதற்குரிய தண்டனையை அனுபவிக்கத்தான் வேண்டும் என்றார்.

“ஆனால், சைருல் போலீஸ்காரராக இருந்தவர். போலீசார் யாரையும் காரணமின்றி கொல்ல மாட்டார்கள். ஒன்று சம்பந்தப்பட்டவர்களால் போலீசார் முதலில் தாக்கப்பட்டிருக்க வேண்டும், அல்லது கொலை செய்யுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல், போலீசார் நம்மை சுட்டுவிடுவார்கள் என நாம் அனைவருமே அச்சத்தில் தான் இருக்க வேண்டியிருக்கும்,” என்று மகாதீர் மேலும் கூறியுள்ளார்.

சைருலின் தாயார் தன்னை சந்திக்க வந்ததாக குறிப்பிட்டுள்ள மகாதீர், அச்சந்திப்பின்போது அவர் அதிகம் பேசவில்லை என்றார்.

“சைருலின் குடும்பத்தார் ஒருவித அச்சத்தில் உள்ளனர். எதைக் கண்டு அஞ்சுகிறார்கள் என எனக்குத் தெரியவில்லை. அவரை என்னிடம் அழைத்து வந்த பாஸ் தகவல் பிரிவு தலைவரிடம் (டத்தோ மஹ்பஸ் ஓமர்) கேட்டபோது, தன்னிடமும் சைருலின் அதிக விவரங்களைக் கூறவில்லை என்று தான் சொன்னார்,” என மகாதீர் மேலும் கூறியுள்ளார்.