புதுடில்லி, மார்ச்.5- “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் குறித்து விசாரிக்கும் சட்டமன்ற கூட்டுக் குழு முன் சாட்சியம் அளிக்க முன்னாள் அமைச்சர் ராஜா அழைக்கப்படமாட்டார் எனத் தெரிகிறது. ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டு, பின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த ஊழல் தொடர்பாக சட்டமன்ற கூட்டுக் குழுவும் விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்தக் கூட்டுக் குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்க தன்னை அனுமதிக்க வேண்டும் என லோக்சபா சபாநாயகர் மீரா குமார் மற்றும் கூட்டுக்குழுத் தலைவர் சாக்கோவுக்கு முன்னாள் அமைச்சர் ராஜா கடிதம் எழுதியிருந்தார்.
அத்துடன் கூட்டுக்குழுவில் இடம் பெற்றுள்ள பா.ஜ. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்களும், “ராஜாவை வரவழைத்து விசாரிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்ற கூட்டுக்குழு தலைவர் சாக்கோ கூறியதாவது:-
சட்டமன்ற கூட்டுக் குழு முன் வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்ற விதிகள் எதுவும் இல்லை. அப்படி உரிமை எதுவும் கோர முடியாது.
சம்பந்தப்பட்ட நபரை விசாரிப்பதன் மூலம் பயன் இருக்கும் என குழு கருதும் பட்சத்தில் அவர் அழைக்கப்படலாம். அதேநேரத்தில், கூட்டுக் குழு முன் ஆஜராக விருப்பம் தெரிவித்து கடிதம் எழுத ராஜாவுக்கு உரிமையில்லை என நான் கூற மாட்டேன்.
கூட்டுக் குழு விசாரணைக்கு அவர் அழைக்கப்படுவாரா அல்லது இல்லையா என்பதற்கும் நான் பதில் அளிக்க இயலாது. குழுவில் இடம் பெற்றுள்ள மற்ற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும் என சாக்கோ கூறினார்.இதன்மூலம் சட்டமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு ராஜா அழைக்கப்பட மாட்டார் என்றே தெரிகிறது.