Home அரசியல் “குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாதவர்களிடம் பொது விவாதமா?” – சேவியர் ஜெயகுமார் பதிலடி

“குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாதவர்களிடம் பொது விவாதமா?” – சேவியர் ஜெயகுமார் பதிலடி

809
0
SHARE
Ad

Xavier-Jeyakumar-Sliderமார்ச் 6 – “நேற்றும், இன்றும் பத்திரிக்கைகளில்  பொது விவாதம் பற்றியும், இந்தியர்கள் மீதான  இரக்கம், அத்திப்பட்டி பற்றியும், புக்கிட் ராஜா தோட்டத் தொழிலாளர்களுக்கு, மத்திய அரசுடன் பேசி 70 ஆயிரம் வெள்ளிக்கு வீடு கட்டுவதை பற்றியும் எல்லாம் தேர்தல் குளிரில் கதை விட்டுள்ளார்கள். கடந்த 56 ஆண்டுகளில்  சிலாங்கூர்  மாநிலத்தில் மேம்பாடு கண்டது  புக்கிட் ராஜா தோட்டம் மட்டுமா? வீடுகளை இழந்தது இங்குள்ள மக்கள் மட்டுமா?” – என  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இந்தியர்களின் பிரச்சனை குறித்து டாக்டர் சேவியருக்கும் ம.இ.காவின் முக்கிய புள்ளிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் பத்திரிக்கை விவாதங்களின் தொடர்ச்சியாக இன்று வெளியிட்டிருக்கும் பத்திரிக்கை அறிக்கை ஒன்றில் டாக்டர் சேவியர் மேலும் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

“ம.இ கா வுக்கும்   அதன் இளைஞர் பகுதி தலைவருக்கும்  இந்திய  இனத்தின் அவல நிலைகுறித்து பேச என்ன தகுதி இருக்கிறது? உங்க அத்திப்பட்டி கதை எல்லாம் மலேசிய இந்தியர்களுக்கு புளித்த பழைய கஞ்சி, நேரத்திற்கு ஒரு பேச்சு – இடத்திற்கு  ஒரு செயல் யாருடையது என்று  மலேசியர்கள்  கவனித்துக் கொண்டுதான் வருகின்றனர்.”

#TamilSchoolmychoice

“தோட்ட மக்களுக்கு சேர வேண்டிய எட்டு ஏக்கர் நிலத்தை கையாடி விட்டோம் என்றால், அதற்கான ஆதாரத்தை நீதி மன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், அல்லது உங்கள் பாரிசான் அதிகாரத்தில் இயங்கும் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்திடம் ஆதாரத்தைத் தந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தது என் மீதோ, மாநில அரசு மீதோ ஒரு போலீஸ் புகார் செய்யக்கூட துணிவில்லாத  ம.இ.கா இளைஞர் பகுதி தலைவர் மோகன், நீண்ட நாட்களாக வெற்று அறிக்கை விட்டே மக்களை ஏமாற்றி வருகிறார். இப்படிப் பட்டவர்களுக்கு பொது விவாதம் புரிய அருகதையுண்டா?” என்று சேவியர் தனது பத்திரிக்கை அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை?

“சட்ட நடவடிக்கை காலம் எடுக்கும் என்றால், மிக சுலபமான வழி ஒன்று உள்ளது.  சைம் டார்பி மத்திய அரசின் உப நிறுவனம், மனித வள அமைச்சர் உங்கள் ம.இ.கா பிரதிநிதி, 144 தொழிலாளர்களுக்கு வாக்குறுதி அளித்தது உங்கள் முன்னாள்  தேசியத் தலைவர் – ஆக அவர்தான் வாங்கி விட்டாரே 15 ஏக்கர் நிலத்தை, அந்த பத்திரங்களை காட்டி, உங்களுக்குள் திட்டம் போட்டு வீடு கட்ட வேண்டியதுதானே! அதற்கு ஏன் ராமாயணம்?” என்றும் சேவியர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தனது பத்திரிக்கை அறிக்கையில் சேவியர் பின்வருமாறும் தெரிவித்துள்ளார்.

“புக்கிட் ராஜாவில் அத்திப்பட்டியா! யார் உருவாக்கியது? 5 ஆண்டுகளில் நாங்கள் உருவாக்கியதா, 56 ஆண்டுகளாக நீங்கள்  உருவாக்கியதா? ம.இ கா வுக்கும்  அதன் இளைஞர் பகுதி தலைவருக்கும்  இந்திய  இனத்தின் அவல நிலைகுறித்து பேச என்ன தகுதி இருக்கிறது? உங்களால் உருவாக்கப்பட்ட அத்திப்பட்டி கதை எல்லாம் மலேசிய இந்தியர்களுக்கு தெரியும்.”

“நாங்கள் ஆட்சிக்கு வந்து ஐந்தே ஆண்டில்  பல சுற்று பேச்சுவார்த்தைக்கு பின் எஞ்சியிருந்த 75 தோட்டப் பாட்டாளிகளுக்கு வரிசை தொடர் வீடுகளை கட்டுவதற்கு  தோட்ட நிர்வாகத்தை வற்புறுத்த முடிகிறது என்றால், கடந்த 20 ஆண்டுகளாக நீங்கள் என்ன செய்துக் கொண்டிருந்தீர்கள்?”

“அத்தோட்டத்தில் ஆரம்ப பட்டியலில் இருந்த 427  புக்கிட் ராஜா தொழிலாளர்களுக்கும் எப்படி? ஏன்?  அடுக்கு மாடி வீடுகளை பேசி முடித்தீர்கள்?  அதுவுமில்லை, அதனை கூட தொழிற்சங்க உதவியுடன்  தொழிலாளர்களே  ஏற்படுத்திக் கொண்டார்கள்  என்கிறீர்களா? கடந்த  56 ஆண்டுக் காலமாக ம.இ.கா அரசியலில்  இந்திய சமுதாயத்திற்கு சாதனையாக இல்லை, வேதனையாகவே  இருந்துள்ளதையாவது  ஒப்புக்கொள்வீரா?”

“புக்கிட் ராஜா தோட்டத் தொழிலாளர்களுக்கு  வீடு கட்டித்தர இப்பொழுதுதான்  உங்கள் மத்திய அரசுடன் பேச போகிறீர்களா?  ஏன் தமிழன் விழித்துக் கொண்டானா?  இத்தனை  ஆண்டுகளாக எங்கே போனது தொழிலாளர்கள் மீதான அந்த பாசம்? அது எப்படி, ம இ கா வுக்கும், பாரிசானுக்கும் இந்தியர்கள் மீது இரக்கங்கூட தேர்தல் வந்தால் மட்டுமே ஏற்படுகிறது?”

தும்போக் தோட்டம் என்ன ஆனது?

“உங்கள் நித்திரையால் ம.இ.கா கோட்டை விட்ட மைக்கா ஹோல்டிங்சாவது  நினைவிருக்கிறதா? அதாவது, போட்ட பணத்திற்கு கணக்கு கேட்டால்  அடித்து வெளியே தூக்கி போடுவீர்களே அந்த நிறுவனத்தை பற்றியது. அந்நிறுவனத்திற்கு சொந்தமான தும்போக் தோட்டம் முழுக்க ம.இ.காவின் தோட்டமாச்சே,  அந்த தோட்டத்து மக்களின் பணத்தை பிடித்தம் செய்து, வீடு கட்டிக் கொடுக்க  ஒப்பந்தமே செய்து விட்டு, அவர்களை நடுத்தொரு நாராயணனாக்கி விட்டீர்களே! அது நினைவிருக்கிறதா?”

“அதுதானே உண்மையான அத்திப்பட்டி, மலேசிய இந்தியர்கள் தங்கள் பணத்தைப் போட்டு, சகா இந்தியனுக்கு நிற்க கூட நிலம் இல்லாமல் செய்து விட்டீர்களே! உங்கள் சமூக  ஆர்வல  இயக்கங்கள்  அங்கே படம் எடுத்தால், பாரிசான்  பணம் கொடுக்காதோ?”

“அவர்களும்  இந்தியர்தானே,  ம.இ கா மத்திய அரசாங்கத்தின்  கருணை அவர்களுக்கு ஏன் கிட்டவில்லை? மோகனின் வீரத்தை அந்த தும்போக் தோட்டத் தொழிலாளர்களுக்கு  வீடு கட்ட காட்டவில்லையே ஏன்? அவர்கள் என்ன அன்னிய பிரஜைகளா?”

“இவர் குடியிருக்கும் பூச்சோங்கிலிருந்து 15 நிமிட பயண நேர தூரத்திலுள்ள  டெங்கில் தாமான் பெர்மாத்தா  குடியிருப்பை எட்டி பார்த்துண்டா? இவர்  எல்லாம்  கிள்ளானிலுள்ள புக்கிட் ராஜா பற்றி பேசுவதா?”

“புத்ரா ஜெயா உருவாக்கத்தின் போது, பாரிசான் அரசு அப்பகுதியின் பூர்வீக குடியினராக இருந்த  நமது இந்திய தோட்டப் பாட்டாளிகளை அகதிகளை போன்று புத்ரா ஜெயா எல்லைக்கு வெளியில் வீசி எறிய துணை நின்றவர்கள் யார்?”

“அந்த ஏழைகளின் இன்னல் போக்க  அவர்களுக்கு  வரிசை  வீடுகள் கட்டிக்கொள்ள 15 ஏக்கர் நிலத்தை சிலாங்கூர் மாநில அரசு ஒதுக்கி விட்டது. ம.இ.கா மற்றும் பாரிசானின்  சுரண்டலால்  அல்லல் படும்  400க்கு மேற்பட்ட  இந்தியர்களுக்கு  உங்கள் மத்திய அரசின் மானியத்தை வாங்கி  வீடு கட்டித் தந்திருக்கலாமே?”

“உங்கள் தலைவர்களுக்கும், மத்திய அரசுக்கும், உங்களுடன் வந்த சமூக  ஆர்வல இயக்கங்களுக்கும், அந்த பாட்டாளிகளின்  அவலம் ஏன் எட்டவில்லை? அதைப் பற்றி ஏன் பேசுவதில்லை”

–   மேற்கண்டவாறு டாக்டர் சேவியர் தனது பத்திரிக்கை அறிக்கையில் கூறியுள்ளார்.