Home கருத்தாய்வு யார் இந்த சுலு சுல்தான்? – ஒரு வரலாற்றுப் பார்வை

யார் இந்த சுலு சுல்தான்? – ஒரு வரலாற்றுப் பார்வை

1281
0
SHARE
Ad

Sultan-Jamalul-Kiram-III-300x199மார்ச் 6 – கடந்த மூன்று வாரங்களாக சபா மாநிலத்தின் அமைதியும்,மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் கெடுவதற்குக் காரணமாக அமைந்தது லகாட் டத்துவில் நுழைந்த சுலு சுல்தான் படையினர் என்று தங்களை சொல்லிக்கொள்பவர்களின் அத்து மீறல்களும், முற்றுகையும்!

பிலிப்பைன்சை சேர்ந்த அந்த ஊடுருவல்காரர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?

அவர்களுக்கும் சபா மாநிலத்திற்கும் என்ன தொடர்பு? இதைப் பற்றி தெரிந்து கொள்ள வரலாற்றை சற்று பின்னோக்கி புரட்டிப் பார்ப்போம்.

#TamilSchoolmychoice

பழங்கால சரித்திரம் சொல்வது என்ன?

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, காலனித்துவ நாடுகளில் தோன்றிய தேசிய எழுச்சியின் விளைவு அந்தந்த நாடுகளின் சுதந்திரத்திற்கு வழிவகுத்தது.

அவ்வாறு சுதந்திரமடைந்த நாடுகள் யாவும் தங்கள் நாடுகளுக்கு அருகே இருக்கும் நிலங்களை சொந்தங் கொண்டாடத் தொடங்கின.

நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பலத்த போட்டியின் இறுதியில் பல பகுதிகள் பங்கிடப்பட்டன. அப்படி பங்கிடப்பட்ட பகுதிகளில் நமது சபா மாநிலமும் ஒன்றாகும்.

சுல்தான்கள் ஆட்சி நடைபெற்றுக்கொண்டு இருந்த அந்த கால கட்டத்தில் புருணை சுல்தான் நிலப்பங்கீடுகளில் தனக்கு மிகவும் உறுதுணையாக இருந்த சுலு சுல்தானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 1658ஆம் வருடம் சபா மாநிலத்தை பரிசளித்தார் என்று சரித்திரக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு வரலாறு நின்றுவிடவில்லை.

16ம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டினர் சுலு தீவுகளின் மீது படையெடுத்து சுலு சுல்தானை வீழ்த்தினர். இதையடுத்து 1878ஆம் ஆண்டு சுலு சுல்தான், பிரிட்டிஷ் வடக்கு போர்னியோ நிறுவனத்திடம் ‘பஜக்’ என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

அந்த ஒப்பந்தத்தின் படி,பிரிட்டிஷ் வடக்கு போர்னியோ நிறுவனம் சபா மாநிலத்தை நிரந்தரமாக வைத்துக்கொண்டு வருடா வருடம் அதற்கு வரி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 1885ஆம் ஆண்டு இங்கிலாந்துடனான உடன்படிக்கையில் ஸ்பெயின்,  சுலு தீவை தான் வைத்துக்கொண்டு சபாவுடன் சேர்த்து மேலும் சில தீவுகளை வடக்கு போர்னியோ நிறுவனத்திடம் ஒப்படைத்தது.

ஆனால் 1898இல் அமெரிக்காவிற்கும்,ஸ்பெயினுக்கும் இடையே நடந்த போரில் ஸ்பெயின் படைகள் தோற்கடிக்கப்பட்டு சுலு தீவுகளை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

அதன் பிறகு, பிலிப்பைன்ஸ் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டு சுலு தீவுகள் யாவும் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன.

மேலும் 1888இல் வடக்கு போர்னியோவை பிரிட்டிஷ் அரசாங்கம் தனதாக்கிகொண்டது. பின்,  காலங்கள் பல கடந்து 1963 ம் ஆண்டு சபாவும், சரவாக் மாநிலமும் மலேசியாவுடன் சேர்ந்தன.

மலேசியாவில் சேர்ந்துவிட்ட பிறகு என்ன நடந்தது?

அதுதான் மலேசியாவுடன் சபாவும், சரவாவும் சேர்ந்துவிட்டதே?அப்புறம் என்ன பிரச்சனை? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஆனால் இதன் பிறகு தான் பிரச்சனை ஆரம்பமாகின்றது.

என்னதான் வரலாற்றில் பல மாற்றங்கள் ஏற்பட்டு சபா மாநிலம் மலேசியாவுடன் சேர்ந்து விட்டாலும் இன்றும் சுலு சுல்தான் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் சபா மாநிலம் தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.

இதுபற்றி பி.பி.சி நிறுவனம் தங்கள் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள கருத்தாய்வில், சுலு சுல்தானுக்கும், வடக்கு போர்னியோ நிறுவனத்திற்குமிடையே செய்யப்பட்ட ‘பஜக்’ஒப்பந்தத்தில் சபா மாநிலத்தை “விற்கவோ” அல்லது “குத்தகைக்கோ” என்று எழுதப்பட்டு இருப்பது தான் இந்த சர்ச்சைக்கான மூல காரணம் என்று கூறியிருக்கிறது.

மேலும் அந்த அறிக்கையில், மலேசியா இன்றுவரை சுலு சுல்தானைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் RM 5,300 செலுத்தி வருவதாக கூறியிருக்கிறது. ஆனால் மலேசியா அதை’பரிமாற்று கட்டணம்’ என்று கூறுகிறது ஆனால் சுலு சுல்தானைச் சேர்ந்தவர்கள் இதை வாடகை என்று கூறிவருகிறார்கள்.

இதனை அடிப்படையாக வைத்துத்தான் சபா மாநிலத்தின் பெரும்பான்மையான நிலப்பரப்பு தங்களுக்கு சொந்தமானது என்ற கோரிக்கைகளுடன், ஆயுதம் தாங்கிய படையினரின் துணை கொண்டு, சுலு சுல்தான் வாரிசுகளில் ஒருவரான ஜமால் கிராம் (படம்)சபாவின் லகாட் டத்து பகுதியை முற்றுகையிட்டார்.

வரலாற்று ஆவணங்களில் நிகழ்ந்த தவறுகள் காரணமாக ஏற்பட்ட குழப்பத்தின் விளைவுதான் தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சை என்று இது குறித்து எழுதும் வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலமாக சம்பந்தப்பட்டவர்களும் சம்பந்தப்பட்ட அரசாங்கங்களும் சரியான முறையில் தீர்வு காணாவிட்டால், இப்பிரச்சனை தொடர்ந்து நீறு பூத்த நெருப்பாக இருந்து, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் இரு நாடுகளுக்கும் இடையிலும் அதன் மக்களுக்கு இடையிலும் கருத்து வேறுபாடுகள் உருவாவதற்கும், நாட்டின் இறையாண்மை கெடுவதற்கும் வழிவகுத்து விடும் என்றும் வரலாற்று ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

தொகுப்பு – பீனிக்ஸ்தாசன்