Home நாடு மலேசியாவின் பொதுத் தேர்தல் ஆண்டு; 2013 பிறந்தது

மலேசியாவின் பொதுத் தேர்தல் ஆண்டு; 2013 பிறந்தது

915
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 31 – ஒவ்வொரு மலேசியனும் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருக்கும் 13-வது பொதுத் தேர்தல் நடைபெறப் போகும் சரித்திரபூர்வமான 2013ஆம் ஆண்டு பிறந்துள்ளது.

இன்று நள்ளிரவு கோலாலம்பூரின் வானப் பரப்பெங்கும் வாண வேடிக்கைகளின் வண்ணங்கள் வானத்தின் நீலத்தையே மாற்றியமைத்து வண்ணக் கோலங்கள் வரைய, நகரின் ஒவ்வொரு மூலையிலும் பட்டாசுகளின் வெடிச் சத்தம் காதுகளைக் குடைய 2013ஆம் ஆண்டு கோலாகலமாகப் பிறந்துள்ளது.

தலைநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மெர்டேக்கா மைதானத்தில் தேசிய கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களும், புத்தாண்டு வரவேற்பு கொண்டாட்டங்களும் ஒரு சேர நடந்தேறின. கலைநிகழ்ச்சிகளும் சிறப்பாக நடந்தன. புத்தாண்டு வரவேற்பு கொண்டாட்டத்தில் மலேசிய துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

#TamilSchoolmychoice

பிறந்திருக்கும் 2013ஆம் ஆண்டு மலேசிய சரித்திரத்தில் தனியிடம் பெறப்போகும் ஆண்டாகும். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மலேசிய நாட்டை வழிநடத்தப்போகும் மத்திய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கவிருக்கும் 13வது பொதுத் தேர்தல் 2013ஆம் ஆண்டில்தான் நடைபெறவுள்ளது.

2008ஆம் ஆண்டு பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பாக்காத்தான் ராயாட் எனப்படும் மக்கள் கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் பெருகிக் கொண்டிருக்கின்றது. இன்னொரு புறத்திலோ பிரதமர் பதவியை ஏற்றதிலிருந்து மாற்றங்களைக் கொண்டு வந்து, மக்களின் மனங்களில் நம்பிக்கையைத் தோற்றுவித்திருக்கும் நஜிப் துன் ரசாக்கின் தலைமைத்துவ ஆற்றலின் காரணமாக அவர் தலைமையேற்றிருக்கும் தேசிய முன்னணி தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது.

மலேசிய அரசியலின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகும் 2013ஆம் ஆண்டு எத்தகைய பரபரப்புக்களை, திருப்பங்களைக் கொண்டுவரப் போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.