சென்னை, ஜூன் 17- தமிழ்ச் சினிமாவை இப்போது பேய் மோகம் பிடித்து ஆட்டுவது போல், இன்னொரு மோகமும் பிடித்து ஆட்டுகிறது. அது தான் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் மோகம்!
தமிழ்ச் சினிமாவைப் பொருத்தவரை, தயாரிப்பாளர்களும் சரி; இயக்குநர்களும் சரி. ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அதன் போக்கையே இறுக்கிப் பிடித்துக்கொள்வார்கள்.
நகைச்சுவைப் பின்னணியில் ஒரு படம் வெற்றி பெற்று விட்டால் தொடர்ந்து நகைச்சுவைப் படங்களையே எடுப்பதும், கிராமியப் பின்னணியில் ஒரு படம் வெற்றி பெற்றால் கிராமியப் படங்களையே எடுப்பதும் தொடர் கதையாகி வருகிறது.
விதவிதமான பேய்ப் படங்களுக்கு அடுத்தபடியாகத் தற்போது ‘இரண்டாம் பாகம்’ என்ற மோகத்திற்குத் தாவியிருக்கிறது தமிழ் சினிமா.
‘நான் அவன் இல்லை’, ‘அமைதிப்படை’, ‘பில்லா’, ‘சிங்கம்’, ‘காஞ்சனா’ என அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்த ‘பகுதி 2’ படங்களின் மோகம் சமீபகாலமாக அதிகமாகிவிட்டது.
பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்த கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வெளியீடுக்குக் காத்துக் கொண்டிருக்கிறது.
தனுஷ் நடிப்பில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய ‘வேலையில்லாப் பட்டதாரி’ படம் வெற்றி பெற்ற சூட்டோடு, இரண்டாம் பாகத்தினையும் ஆரம்பித்துவிட்டார்கள்..
நகைச்சுவையும் திகிலும் கலந்த ‘அரண்மனை’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது.
இது தவிர, ஷங்கரின் இயக்கத்தில் ‘எந்திரன் 2’ , லிங்குசாமி இயக்கத்தில் அடுத்தடுத்து வளரவிருக்கிறது ‘சண்டக்கோழி 2’ மற்றும் ‘பையா 2’.
இது போன்று பல படங்கள் இரண்டாம் பாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் வெளிவந்த படங்களின் இரண்டாம் பாகத்தைத் தான் எடுக்கிறார்கள் என்று பார்த்தால், கார்த்திக் நடிப்பில் 25 வருடத்திற்கு முன் மிகப் பெரிய வெற்றி பெற்ற ‘அமரன்’ படத்தின் இரண்டாம் பாகமும் இப்போது தயாராகிறது. முதல் பாகத்தை இயக்கிய ராஜேஷ்வரே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். பழைய கார்த்திக்கே கதாநாயகனாகவும் நடிக்கிறார்.
நல்லவேளை! எம்.ஜி.ஆர், சிவாஜி எல்லாம் இப்போது உயிரோடு இல்லை. இருந்திருந்தால், அவர்களையும் இப்போது கதாநாயகனாகப் போட்டு ‘நான் ஆணையிட்டால் பாகம் 2’, ‘வசந்தமாளிகை பாகம் 2’ என்று படம் எடுக்க ஆரம்பித்திருப்பார்கள்!