ஹாலிவுட், ஜூன் 19- சரக்குப் போக்குவரத்தைக் கையாளும் முன்னணி நிறுவனத்தின் உயர் அதிகாரியாக இருப்பவன் சக் நோலன்ட்.
தன் பணியில் எப்போதும் தீவிரமாக இயங்குபவனை, பணி நிமித்தமாக அழைக்கிறது மலேசியா.
தன் நீண்டநாள் காதலியான கெல்லியின் அன்பு வேண்டுகோளை நிராகரித்துவிட்டு, மலேசியாவிற்குப் பயணமாகிறான் நோலன்ட்.
அமெரிக்காவில் இருந்து புறப்படும் அவன் விமானம், கடுமையான புயலில் சிக்கி, பசிபிக் பெருங்கடலில் நொறுங்கி விழுந்து, தப்பிப் பிழைத்து ஆள் அரவமற்ற தீவில் அவன் மட்டும் கரை ஒதுங்குகிறான்..
அங்கிருந்து தப்பிக்க வழியில்லை என்கிற நிதர்சனம் புரிந்ததும், எப்படியாவது உயிர் வாழ வேண்டும் என்று போராடுகிறான்.
தனிமை வதைக்கும் போதெல்லாம், காதலியின் புகைப்படம் அவனுக்கு ஆறுதலாய் இருக்கிறது. அவனோடு கரை ஒதுங்கிய டார்ச்சின் வெளிச்சம், அவளது புகைப்படத்தை தழுவி, ஒவ்வொரு இரவும் அவனை தூங்க வைக்கிறது.
வாய்ப்பிருந்தும் வாழத் தவறிய வாழ்க்கையைப் பற்றிய எண்ணம், ஒவ்வொரு நாளும் கண்ணீராய்க் கரைகிறது.
நான்கு ஆண்டுகள் கழித்து,நோலன்ட் மீட்கப்படுகிறான். அப்போது,அவன் காதலிக்குத் திருமணம் ஆகியிருக்கிறது.
அருகில் இருந்தபோது ரசிக்காத காதலியை, தூரத்தில் நின்று பார்த்து உயிர் கசிகிறான்.
நாம் பயணிக்க வேண்டிய வாழ்க்கைப் பாதையை, அவன் நிலை, நமக்கு அற்புதமாய் அடையாளம் காட்டுகிறது.
வெளிநாட்டு வேலைக்கு ஆசைக்கு ஆட்பட்டுச் செல்லும் ஒவ்வொருவருக்கும் இப்படம் ஒரு பாடம் என்று கூட சொல்லலாம்