பத்தனம்திட்டா, ஜூன்19- சூரியசக்தி மின்கூரை அமைத்துத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் கேரள நீதிமன்றம் சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோருக்குத் தலா 3 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு, கேரள மாநிலத்தில் சூரியஒளி மின் உற்பத்தி செய்யும் கூரை அமைத்துத் தருவதாகக் கூறிப் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக நடிகை சரிதா எஸ்.நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது புகார்கள் குவிந்தன.
வெளிநாடு வாழ் இந்தியரான பாபுராஜ் என்பவர், சூரியசக்தி மின்கூரை அமைப்பு நிறுவனத்தில் தன்னைப் பங்குதாரராகச் சேர்த்து ரூ.1 கோடியே 19 லட்சம் மோசடி செய்ததாகச் சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்குத் தொடர்ந்தார்
இதில் சரிதா நாயர் கைது செய்யப்பட்டுப் பின்பு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பிஜு ராதாகிருஷ்ணன் இந்த மோசடி வழக்கிலும், அவரது மனைவி கொலை வழக்கிலும் கடந்த ஒரு வருடமாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த மோசடி வழக்கில் நேற்று, முதல் தீர்ப்பு வெளியானது. இந்த மோசடி வழக்கை விசாரித்த பத்தனம்திட்டா நகர நீதிமன்ற நீதிபதி ஆர்.ஜெயகிருஷ்ணன், குற்றச்சாட்டு நிரூபணம் ஆனதாகக் கூறி சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோரைக் குற்றவாளிகளாக அறிவித்து, இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சரிதா நாயாருக்கு ரூ.45 லட்சமும், பிஜு ராதாகிருஷ்ணனுக்கு ரூ.75 லட்சமும் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார்.