Home இந்தியா இந்தியாவின் நெருக்கடியால் குளிர்பானங்களில் உப்பின் அளவைக் குறைக்கிறது பெப்சிகோ!

இந்தியாவின் நெருக்கடியால் குளிர்பானங்களில் உப்பின் அளவைக் குறைக்கிறது பெப்சிகோ!

597
0
SHARE
Ad

புது டெல்லி, ஜூன் 22 – மேகி நூடுல்ஸ் விவகாரத்தைத் தொடர்ந்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, அனைத்து உணவு தயாரிப்பு நிறுவனங்கள் மீதும் கண்காணிப்புகளையும், விதிமுறைகளையும் கடுமையாக்கி உள்ளது. இந்நிலையில் அமெரிக்க நிறுவனமான பெப்சிகோ தனது குளிர்பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களில் உப்பு மற்றும் இனிப்பின் அளவைக் குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.

நெஸ்லே நிறுவனம் தனது தாயாரிப்பான மேகியில், அளவிற்கதிகமான வேதிப் பொருட்களைச் சேர்த்த விவகாரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதனைத் தொடர்ந்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பட்டு அமைப்பின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக அந்த அமைப்பு தனது கண்காணிப்புகளிலும், விதிமுறைகளிலும் தனது பிடியை இறுக்கி உள்ளது. அதன் முதற்கட்டமாக வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் அதிகம் விற்பனையாகி வரும் குளிர்பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களில் நுகர்வோருக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவிற்கு உப்பு மற்றும் இனிப்புச் சுவை இருப்பது குறித்துக் கண்காணிக்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான தகவல்களை அறிந்த பெப்சிகோ நிறுவனம், இந்தியாவிற்கு ஏற்றுமதியாகும் குளிர்பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களில் தேவையான மாறுதல்களைச் செய்வதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “நுகர்வோரின் கோரிக்கைகளுக்கு இணங்க எங்கள் உணவுப் பொருட்களில் சோடியத்தின் அளவையும், இனிப்பின் அளவையும் குறைக்க முடிவு செய்துள்ளோம். அதே சமயத்தில், ‘நிறைவுற்ற கொழுப்புகளையும்’ (Saturated Fat) முழுவதுமாக நீக்க முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பெப்சிகோவின் இந்த அறிவிப்பினை வரவேற்றுள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் முக்கிய ஆலோசகர் அமித் குரானா இது பற்றி கூறுகையில், “பெப்சிகோவின் இந்த முடிவு வரவேற்கத் தக்கது. ஒவ்வொரு நிறுவனமும் வர்த்தக இலாபங்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல், நுகர்வோரின் நலனையும் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். எனினும், கடந்த காலங்களில் பெப்சிகோ போன்ற நிறுவனங்கள் பலமுறை இதுபோன்ற முடிவுகளை எடுத்து பின்னர் அதனை செயல்படுத்தாமலே விட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.