புதுடெல்லி, ஜூன் 22 – உலகம் முழுவதும் நேற்று அனைத்துலக முதலாவது யோகா தினம் கொண்டாடப்பட்டது. மத்திய மொரார்ஜி தேசாய் யோகா கல்வி நிறுவனம் சார்பில் குடியரசுத் தலைவர் மாளிகையில் யோகா தின விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த யோகா தினவிழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அதன் பின்பு, விழாவைத் தொடங்கி வைத்து அவர் பேசுகையில், “யோகா கலையின் தாய்வீடு இந்தியா”.
“இந்த மண்ணில் நூற்றாண்டுகளாக யோகா கலை கடைப்பிடிக்கப்பட்டு, பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. யோகா என்பது ஒரு கலை மற்றும் அறிவியல் என்று கூட கூறலாம். எண்ணற்ற நோய்களைக் குணமாக்கும் அபூர்வ சக்திகளை யோகா கலை தன்னகத்தே கொண்டுள்ளது”.
“மனித வாழ்க்கை நலமுடன் வாழ்வதற்கான சக்திகளை வெளியேறாமல் காக்கிறது. நவீன வாழ்க்கை முறையில் ஏற்படும் உடல் நலக்கோளாறுகள், மனஅழுத்தங்களைக் கையாள யோகா சிறந்த தீர்வாக இருக்கும். யோகா கலையைப் பயிற்றுவிப்பதில் யோகா குரு பதஞ்சலி மிகவும் முக்கியமானவர்” என்றார்.
மேலும், அதிபர் மாளிகை வளாகத்தில் தங்கியிருப்பவர்கள் நீண்டகாலமாக யோகா செய்து வருவது குறித்து பிரணாப் முகர்ஜி மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்த விழாவில் அதிபர் மாளிகையில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.