Home நாடு இந்தியத் தூதரகம் கொண்டாடிய யோகா தினம் – நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பங்கேற்பு

இந்தியத் தூதரகம் கொண்டாடிய யோகா தினம் – நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பங்கேற்பு

922
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த ஜூன் 21-ஆம் தேதி உலகம் எங்கிலும் கொண்டாடப்பட்ட அனைத்துலக யோகா தினம், மலேசியாவிலும் கொண்டாடப்பட்டது.

கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம், பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 23-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்டமான யோகா தினக் கொண்டாட்டத்தில் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் பேர் கலந்து சிறப்பித்ததோடு, அனைவரும் ஒன்றிணைந்து யோகா பயிற்சியிலும் ஈடுபட்டனர்.

இந்த யோகா தின நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, அனைவரோடு இணைந்து யோகா பயிற்சிகளையும் மேற்கொண்டார்.

#TamilSchoolmychoice

மலேசியாவுக்கான இந்தியத் தூதர் மிருதுள் குமார் இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்றார். இந்தியத் தூதரகத்தின் உயர் அதிகாரிகளும், பத்துமலை ஆலய நிர்வாகத்தினரும், கோபியோ இயக்கத்தின் பொறுப்பாளர்களும், பல்வேறு அரசு சாரா இயக்கப் பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

யோகாவின் மேன்மைகள் குறித்தும், அதனால் ஏற்படும் பலன்கள் குறித்தும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய உரையின் காணொளியோடு தொடங்கிய நிகழ்ச்சியில் பின்னர் உரையாற்றிய மிருதுள் குமார் யோகா தினக் கொண்டாட்டங்களின் சிறப்பு குறித்து விளக்கமளித்தார்.

கோலாலம்பூர் இந்தியக் கலாச்சார மையத்தைச் சேர்ந்த யோகா ஆசிரியர் யோகாவின் சில வழிமுறைகளையும், பயிற்சிகளையும் செய்து காட்டினார். யோகா மாணவர்கள் சில யோகா பயிற்சிகளையும் செய்து காட்டினர்.

சிறந்த யோகா மாணவர்களுக்கு நற்சான்றிதழ்களும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.