Home தொழில் நுட்பம் ‘செல்லினம்’ பதிவிறக்கம் – ஆண்டிராய்டில் 100,000 பயனர்களைத் தாண்டி சாதனை!

‘செல்லினம்’ பதிவிறக்கம் – ஆண்டிராய்டில் 100,000 பயனர்களைத் தாண்டி சாதனை!

967
0
SHARE
Ad

Sellinam_New_Icon_512x512கோலாலம்பூர், மார்ச் 31 – தமிழ்க் கணினி உலகிலும், இணையத் தொழில் நுட்பத்தில் தமிழ் மொழியை முன்னெடுத்துச் செல்லும் முக்கிய செயலியாகக் கருதப்படும் ‘செல்லினம்’ உலகெங்கிலும் உள்ள தமிழ் மொழி ஆர்வலர்களின் மகத்தான ஆதரவைப் பெற்று, ஆண்டிராய்டு கருவிகளில் தற்போது அதன் பதிவிறக்க எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் தாண்டிவிட்டது.

கைத்தொலைபேசிகளில் தமிழ் மொழியிலேயே குறுஞ்செய்திகளை அனுப்பும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்துள்ள முதல் செயலி செல்லினம் ஆகும். 2003ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தச் செயலி 2005ஆம் ஆண்டு சாதாரணக் கைப்பேசிகளில் பொதுப்பயனீட்டிற்கு அறிமுகப் படுத்தப்பட்டது. 2009ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் ஐ-பேட் கருவிகளிலும் 2011ஆம் ஆண்டு எச்.டி.சி கருவிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்ட செல்லினம், 2012ஆம் ஆண்டு டிசம்பரில் கூகுள் பிளே வழியாக ஆண்டிராய்டு பயனர்களுக்கு இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் (படம்) தான் செல்லினத்தை உருவாக்கி வடிவமைத்தவர் ஆவார். தமிழ்க் கணினி உலகிலும், முரசு மென்பொருள் மேம்பாட்டிலும் குறிப்பிடத்தக்க சாதனைகள் புரிந்துள்ள முத்து நெடுமாறன், தமிழ் இணைய உலகிலும், தமிழ் இணைய மாநாடுகளிலும் பிரபலமானவர். தமிழ் மட்டுமல்லாது அனைத்து இந்திய மொழிகளுக்கும் இந்தோ சீன மொழிகளுக்கும் எழுத்துருகளையும் உள்ளீட்டு முறைகளையும் உருவாக்கியவர் அவர்.muthu nedumaran

#TamilSchoolmychoice

சாதாரண கைத்தொலைபேசிகள் திறன் பேசிகளாக உருமாறி உலகைக் கலக்கி வந்த தருணங்களில், தமிழறிந்த உலகத் தமிழர்களின் மிகப்பெரிய ஏக்கமாக இருந்தது, இத்தனை சிறப்புகள் வாய்ந்த தமிழ் மொழியிலேயே திறன்பேசிகளின் வழியாக தகவல் சேகரிப்பையும் பரிமாற்றங்களையும் நிகழ்த்த முடியவில்லையே என்பதுதான்!

அந்தக் குறையை நிறைவு செய்யும் வண்ணம் முத்து நெடுமாறனின் கருத்திலும், கைவண்ணத்திலும் உருவானது தான் செல்லினம். இதுவரை 150,000 க்கும் மேற்பட்டோர் செல்லினத்தை பல வகையான கைப்பேசிகளிலும் திறன்பேசிகளிலும் தட்டைக்கருவிகளிலும் பதிவிறக்கம் செய்துள்ளனார். இவர்களுள் ஆண்டிராய்டு பயனர்களே அதிகம் என்பது புள்ளி விவரங்கள் வழி தெரிய வந்துள்ளது.

2005ஆம் ஆண்டு நடந்தேறிய செல்லினம் அறிமுக விழாவில் உரையாற்றி கவிப் பேரரசு வைரமுத்து, தமிழ் மொழி இலக்கணத்தில் இதுவரை இருந்துவரும் மெல்லினம், இடையினம், வல்லினம், ஆகியவற்றோடு இப்போது நான்காவது இனமாக செல்லினம் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது எனப் பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்திலும் செல்லினம்

ஆண்ட்ராய்டு தொழில் நுட்பம் பலவகையான திறன்பேசிகளிலும் தட்டைக்கருவிகளிலும் வடிவமைக்கப்பட்டு அதனால் ஏற்பட்ட பரவலான பயன்பாட்டால், செல்லினம் ஆண்டிராய்டு திறன் பேசிகளிலும் இடம் பெறும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது.

இந்த முன்னேற்றத்தைத் தொடர்ந்து ஐபோன்கள் வைத்திராத ஆண்டிராய்டு தொழில்நுட்ப திறன்பேசிகளைப் பயன்படுத்துபவர்களும் செல்லினத்தைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தத் தொடங்கினர்.

கடந்த ஓராண்டுக்குள் ஆண்டிராய்டு  கருவிகளில் செல்லினம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் தாண்டியுள்ளது மட்டுமல்லாமல் கூகுள் பிளே பதிவிறக்கத் தளத்தில் பயனர்களின் கருத்துகளைப் பார்க்கும் போது, இது ஒரு சாதனையாகவே கருதப்படுகின்றது!