செல்லினம் செயலிக்கு இருபது வயதாகிறது. அஞ்சல் மொபைல் என்னும் பெயரில் அறிமுகமாகி செல்லினமாக மாற்றம் கண்டு, பொதுப்பயன்பாட்டுக்கு வந்து இருபதாண்டுகளாகிவிட்டன. செல்பேசிகளில் தமிழில் எழுதுவதை எளிமைப்படுத்திய செயலி செல்லினம். தமிழ் உலகுக்கு முத்து நெடுமாறன் அளித்த கொடை.
2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி மலேசியாவில் மேக்சிஸ் செல்பேசி தொடர்பு நிறுவனம் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அந்தக் கண்காட்சியில் செல்லினத்தின் நோக்கங்கள், பயன்பாடுகள் குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அடுத்த இரண்டாண்டுகளில் சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8-இன் ஆதரவில் பொதுப்பயன்பாட்டுக்கு வந்தது செல்லினம். 2005ஆம் ஆண்டு பொங்கல் நாளில் அந்த இனிப்பான அறிவிப்பு வெளியானது. அப்போது நடந்த விழாவில் கலந்து கொண்ட வைரமுத்துவின் கவிதை செல்லினத்தின் வழியாகத் தட்டச்சு செய்யப்பட்டு செல்பேசியில் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது. அஞ்சல் மொபைல் என்ற பெயர் செல்லினம் என மாற்றம் பெற்றது. மிகப் புதுமையான செல்பேசிச் செயலிகள் பிரிவில், 2005ஆம் ஆண்டு மலேசிய அரசு ஐசிடி தனிச்சிறப்பு விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவின் செல்காம், இந்தியாவின் ஏர்செல், ஐக்கிய அரபு மாநிலங்களின் எடிசலாட் போன்ற செல்பேசி தொடர்பு நிறுவனங்கள் அவர்களுடைய பயனர்களுக்காக செல்லினத்தை வெளியிட்டனர். பணப்பரிமாற்ற நிறுவனமான வெஸ்டர்ன் யூனியன் அவர்களுடைய சிங்கப்பூர் பயனர்களுக்காகக் கட்டணமில்லாமல் செல்லினத்தைப் பதிவிறக்கம் செய்யும் வசதியைக் கொடுத்தது.
தமிழுக்கென உருவாக்கப்பட்ட செல்லினத்தின் நுட்பங்கள் இந்தி, மலையாளம் சிங்களம் உள்ளிட்ட மொழிகளுக்கான உள்ளீட்டு முறைகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டன. 2007ஆம் ஆண்டு மாலத்தீவுகளில் பேசப்படும் திவேகி மொழிக்கும் மலாய் மொழியின் மற்றொரு எழுத்து வடிவமான ஜாவி வரி வடிவத்துக்காகவும் செல்லினத்தின் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.
அதுவரை ஜாவா தொழில் நுட்பத்தில் இயங்கிக்கொண்டிருந்த சிறிய கைப்பேசிகளில் செயல்பட்ட செல்லினம் திறன்பேசிகளிலும் இயங்கத் தொடங்கியது. 2009ஆம் ஆண்டு முதல் ஐபோனிலும் 2011ஆம் ஆண்டு முதல் எச்டிசி ஆண்டிராய்டிலும் 2012ஆம் ஆண்டு முதல் எல்லா ஆண்டிராய்டு கருவிகளிலும் செல்லினம் இயங்கி வருகிறது.
2013ஆம் ஆண்டு தமிழ்99, அஞ்சல் ஆகிய செல்லினத்தின் இரு விசைமுகங்களும் ஐஓஎஸ் ஏழாம் பதிப்பில் சேர்க்கப்பட்டன. 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட செல்லினத்தின் நான்காம் பதிப்பில் சொற்பிழைத் திருத்தம், தட்டெழுதும்போது தோன்றும் சொற்களின் பரிந்துரை, எழுதப்படும் சொல்லுக்கு அடுத்து வரும் பரிந்துரை, மெய்யெழுத்துகள் இல்லாமல் தட்டெழுதும் வசதி போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன. அனைத்து திருக்குறட்பாக்களும் தமிழ்ப் பழமொழிகளும் பரிந்துரை இயந்திரத்தில் சேர்க்கப்பட்டதும் இந்தப் பதிப்பின்போது நிகழ்ந்தவையே. அடுத்துவந்த 4.0.3ஆம் பதிப்பில் செல்லினம் தொடர்பான பயன்பாட்டுக் கட்டுரைகளை செல்லினம் இணையதளத்திலிருந்து தமிழ் அறிவிக்கைகளின் வழியாகப் பெறும் வசதியும் சேர்க்கப்பட்டது.
2016ஆம் ஆண்டு கூகுள் பிளே தளத்திலிருந்து ஐந்து லட்சம் பேர் செல்லினத்தைப் பதிவிறக்கம் செய்திருந்தனர். வெளியிடப்பட்ட நாளிலிருந்து கணக்கில் கொண்டால் நாளொன்றுக்கு செல்லினத்தை பதிவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை ஐந்நூறு. 2018ஆம் ஆண்டில் பதிவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தொட்டது. 2021ஆம் ஆண்டு பொங்கலன்று வரிவடிவத்தை ஒலிவடிவமாக மாற்றும் சொல்வன் என்னும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
எங்கெல்லாம் ஆங்கிலத்தில் எழுத முடிகிறதோ அங்கெல்லாம் தமிழிலும் எழுத முடிய வேண்டுமென்னும் முத்து நெடுமாறன் கண்ட கனவை அவர் நிறைவேற்றினார். பல மில்லியன் பதிவிறக்கங்கள் மூலம் செல்லினம் பயனர்கள் அதை உறுதி செய்தனர்.
திறன்பேசிக் கருவியை தங்கள் முதல் மின்னிலக்கக் கருவியாகப் பயன்படுத்திய மில்லியன் மக்களுக்குத் தமிழில் தட்டெழுத உதவி புரிந்துள்ளது செல்லினம். பெரும்பாலான திறன்பேசி கருவிகளில் இயல்பாகவே தமிழ் விசைமுகங்கள் இருந்தாலும் செல்லினத்தையே அதிகம்பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர். செல்லினம் வழங்கும் கூடுதல் வசதிகளும் எழுத்துகளின் அழகியலும் இதற்குக் காரணம் என்பது தரவுகளின் வழி நாம் காணும் உண்மை.
தமிழில் எழுதும் நல்லுலகுக்கு செல்லினத்தின் பங்களிப்பு அளப்பரியது.