குவா மூசாங் – ஓராங் அஸ்லி என்று அழைக்கப்படும் மலேசிய பழங்குடி இனத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் மர்மமான முறையில் மாயமாகி இரண்டு வாரங்களாகியும், அவர்களை தேடுதல் குழுவினர் இன்னும் கண்டுபிடிக்காததால், அவர்களது தாய் மிகவும் மனவேதனை அடைந்துள்ளார்.
எஸ்கே தோகோய் பள்ளியைச் சேர்ந்த அந்த 7 மாணவர்களில், இரண்டு மாணவர்களின் தாயான மிடா அங்கா கூறுகையில், பெரிய அளவிலான தேடுதல் வேட்டை நடத்தியும், தனது குழந்தைகள் காப்பாற்றப்படுவார்கள் என்று தனக்குத் தோன்றவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
“இந்த தேடும் முயற்சிகள் மிகவும் தாமதமாகத் தொடங்கப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். எனது குழந்தைகள் இறந்துவிட்டதாக நான் நம்புகிறேன் காரணம் நீண்ட நாட்கள் அடர்ந்த காட்டில் வாழும் திறன் அவர்களுக்கு இல்லை” என்று வேதனையுடன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
எஸ்கே தோகோய் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அந்த 7 குழந்தைகளும், கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி, தங்கும்விடுதியில் இருந்து தப்பித்து காட்டிற்குள் சென்றுவிட்டதாகக் கூறப்படுகின்றது.
பள்ளிக்கு அருகிலுள்ள ஆறு ஒன்றில் குளித்ததது, பள்ளி நிர்வாகத்திற்குத் தெரிய வர, தண்டனைக்குப் பயந்து அவர்கள் காட்டிற்குள் தப்பி ஓடியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
நேற்று வரை 100 காவல்துறையினர், தன்னார்வலர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் 180 ஓராங் அஸ்லி குடியிருப்பு வாசிகள் ஆகியோர் மாயமான குழந்தைகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.