புதுடெல்லி, மார்ச்.11-இந்தியாவின் தலைநகர் புது தில்லியில் நடந்த மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் ஒருவர் திஹார் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் அந்த மாணவி பலபேரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பேருந்தை ஓட்டியதாக ராம் சிங் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த தாக்குதலுக்குள்ளான மாணவி பிறகு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் மிகப்பெரிய கண்டனத்தை தோற்றுவித்திருந்தது.
மற்ற இரண்டு பேருடன் ராம் சிங் தங்கியிருந்த சிறை கொட்டடியில் இருந்த போர்வையைப் பயன்படுத்தி அவர் தூக்கிட்டு இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், ராம் சிங் உட்பட ஐந்துபேர் மீது மரணதண்டனை விதிக்கத்தக்க பிரிவுகளின் கீழான வழக்கு நடந்து வருகிறது.
இதே வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஆறாவது நபர், சிறார் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.
ஆனால், தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் ராம்சிங் என்பவரின் குடும்பத்தவரும், அவருடைய வழக்கறிஞரும் அவர் நல்ல மனநிலையில் இருந்ததாகவும், அவர் தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.