Home Featured நாடு மக்கள் திரளும் 3 கோலாலம்பூர் பொது நிகழ்ச்சிகளில் மோடி! உச்சகட்ட பாதுகாப்பு!

மக்கள் திரளும் 3 கோலாலம்பூர் பொது நிகழ்ச்சிகளில் மோடி! உச்சகட்ட பாதுகாப்பு!

959
0
SHARE
Ad

narendra modiகோலாலம்பூர் – உலகம் முழுவதும் அச்சத்தைத் தோற்றுவித்துள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதத் தாக்குதல்களின் எதிரொலி ஒருபுறம் – பாரிஸ் தாக்குதல்களின் இரத்தச் சுவடுகள் இன்னும் ஈரம் காயாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழல் இன்னொரு புறமாக – ஆசியான் உச்சநிலை மாநாடு கோலாலம்பூரில் தொடங்கியுள்ளது.

கோலாலம்பூரிலும் ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய சிலர் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருப்பதும் தற்போதைய சூழலை பரபரப்பாக்கியுள்ளது.

இந்நிலையில் ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ளவும், மலேசியாவுக்கான வருகையாகவும், எதிர்வரும் சனிக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் என்ற முறையில் முதன் முறையாக கோலாலம்பூர் வருகின்றார்.

#TamilSchoolmychoice

உலக நாடுகளுக்கு எங்கு சென்றாலும் அங்குள்ள இந்திய வம்சாவளியினருடனான பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ள நரேந்திர மோடி கோலாலம்பூரிலும், மக்கள் திரளும் மூன்று பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் மோடி…

little-india-2-5பிரிக்பீல்ட்ஸ், லிட்டல் இந்தியா வட்டாரத்தில் தோரண வாயில் நிர்மாணிப்பு தொடர்பான நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சில வருடங்களுக்கு முன்பு மலேசியாவுக்கு வருகை தந்தபோது, பிரதமர் நஜிப்புடன் இதே பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நீரூற்றுடன் கூடிய அலங்கார முகப்பு அங்கு திறந்து வைக்கப்பட்டது.

அதே இடத்தில் அதன் தொடர்ச்சியாகத்தான் மோடிக்கும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

பிரிக்பீல்ட்ஸ் வருகை தரும்போது, அங்கு அண்மையில் பாரம்பரிய சின்னமான அறிவிக்கப்பட்ட விவேகானந்தா ஆசிரமத்துக்கும் மோடி வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மோடியின் முதல் பெயரான “நரேந்திர” என்ற பெயர்தான் சுவாமி விவேகானந்தரின் அசல் பெயர் என்ற பொருத்தம் ஒருபுறம் இருக்க, விவேகானந்தரை தனது மானசீகக் குரு என மோடி பலமுறை தெரிவித்திருக்கின்றார்.

விவேகானந்தர் சிலை திறப்பு விழா

Swami Vivekanandaகோலாலம்பூர் வருகையின்போது, பெட்டாலிங் ஜெயா, ஜாலான் காசிங் பகுதியிலுள்ள, இராமகிருஷ்ண ஆசிரமத்தின் வளாகத்தில் சுவாமி விவேகானந்தரின் சிலையை மோடி திறந்து வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

12,000 பேர் கொண்ட பிரம்மாண்ட கூட்டத்தில் மோடி

மோடி வருகையின் உச்சகட்டமாக அமையப் போவது மைன்ஸ் கண்காட்சி மண்டபத்தில் சுமார் 12,000 பேர் கலந்து கொள்ளும் இந்திய வம்சாவளியினருடனான பிரம்மாண்டமான பொதுக் கூட்டமாகும்.

இதில் மோடி உரையாற்றவிருக்கின்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான முன் அனுமதிகள் பெற இணையம் மூலமாக பதிவுகள் நடைபெற்று வந்தன.

உச்சகட்டப் பாதுகாப்பு

பாரிஸ் தாக்குதல்கள் ஏற்படுத்தியுள்ள அச்ச சூழலில், மோடிக்கு உச்ச கட்ட பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக, பிரிக்பீல்ட்ஸ் வட்டாரம் இப்போது இருந்தே, இந்தியாவின் காவல் துறையின் கண்காணிப்பிலும், மலேசியக் காவல்துறையின் கண்காணிப்பிலும் கொண்டு வரப்பட்டுள்ளதாக லிட்டல் இந்தியா வட்டாரத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

லிட்டல் இந்தியா வளாகத்தில் உள்ள கட்டிடங்களும், அதன் கட்டிட அமைப்புகளும் காவல் துறையினரால் பரிசோதிக்கப்படுகின்றன என அந்த வட்டாரத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

-செல்லியல் தொகுப்பு