புது டெல்லி – யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள நூடுல்சிற்கு அனுமதி பெறப்படவில்லை என உணவு பாதுகாப்பு மற்றும் இந்திய தர ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மேகிக்கு தடை விதிக்கப்பட்ட போது, இயற்கையான முறையில் எங்கள் நிறுவனம் நூடுல்ஸ் தயாரிக்கும் என அறிவித்தார் பாபா ராம்தேவி. தான் கூறியபடியே அவர் சமீபத்தில் தனது பதஞ்சலி நிறுவனம் சார்பில், உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்காத உடனடி நுாடுல்சை அறிமுகப்படுத்தினார்.
நாடு முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் நேற்று முதல் இந்த நூடுல்ஸ் விற்பனைக்கு வந்தது. அந்த நூடுல்ஸ் பாக்கெட்டுகளில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம்(FSSAI) வழங்கக்கூடிய உரிமம் எண்ணும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், ராம்தேவின் நூடுல்சிற்கு தாங்கள் அனுமதி வழங்கவில்லை என்றும், அவர்கள் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக உரிமம் எண்ணை பயன்படுத்தி உள்ளனர் என்றும் எப்எஸ்எஸ்ஏஐ தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்திற்கு நோட்டீஸ் ஒன்றும் அனுப்பப்படும் என்றும் அறிவித்துள்ளது.