Home Featured நாடு மொராயிஸ் கொலையில் திடுக்கிடும் திருப்பம்: சகோதரர் மூலமாக வெளிவந்திருக்கும் புதிய உண்மை!

மொராயிஸ் கொலையில் திடுக்கிடும் திருப்பம்: சகோதரர் மூலமாக வெளிவந்திருக்கும் புதிய உண்மை!

874
0
SHARE
Ad

Kevin Moraisகோலாலம்பூர் –  தான் கொலை செய்யப்படலாம் என்பதை முன்கூட்டியே அறிந்த அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராயிஸ், முக்கிய ஆவணங்கள் அடங்கிய ‘பென் டிரைவ்’ (தகவல் சேமிப்புக் கருவி) ஒன்றை தனது சகோதரருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தற்போது இந்த விவகாரம், அவரது சகோதரரான சார்லஸ் சுரேஸ் மொராயிஸ் மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

“அந்தப் பென் டிரைவ் தற்போது அமெரிக்காவில் ஒருவரிடம் உள்ளது. இந்த சத்தியப் பிரமாணம் அளிப்பதன் மூலம் எனக்கு ஏதாவது நேர்ந்தால் அந்தத் தகவல்கள் அனைத்தும் பொதுவில் வெளியிடப்படும்”

#TamilSchoolmychoice

“மலேசியாவில் அதிகாரத்தில் உள்ள முக்கிய சக்திகள் பலரைப் பற்றி , கொலை செய்யப்படுவதற்கு முன்பு வரை கெவின் மொராயிஸ் திரட்டியுள்ள விசாரணைகளும், ஆதாரங்களும் அதில் அடங்கியுள்ளன” என்று சார்லஸ் இன்று சத்தியப் பிரமாணம் எடுத்துள்ளார்.

தனக்கு இந்த விசயத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் கெவின் தெரிவித்ததாகவும், பென்டிரைவை அஞ்சல் மூலமாக அனுப்பி வைத்ததாகவும் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

அட்லாண்டாவிலுள்ள தனது இல்லத்திற்கு கடந்த அக்டோபர் மாதம் பென்டிரைவ் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கெவின் மொராயிஸ் கடந்த செப்டம்பர் 4-ம் தேதி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலம் செமெண்ட் ஊற்றப்பட்ட பீப்பாயில் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி கண்டெடுக்கப்பட்டது.

கெவின் மொராயிசின் சடலத்தில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டாலும், மொராயிசின் குடும்பத்தினர் இரண்டாவது பிரேதப் பரிசோதனை செய்து அறிக்கை வழங்க வேண்டும் என்று இத்தனை நாட்களாக சடலத்தைப் பெற்றுக் கொள்ளாமல் இருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சடலத்தை அவர்கள் பெற்றுக் கொண்டனர்.

மொராயிசை பழி வாங்கும் நோக்கத்தோடு கொலை செய்ததாக கடந்த செப்டம்பர் 28-ம் தேதி, இராணுவ மருத்துவர் உட்பட 6 பேர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், அவரது கொலையில் வேறு காரணங்கள் இருக்கலாம் என சார்லஸ் கூறுகின்றார்.