கோவா – இந்தியாவில் சமீப காலமாக மத சகிப்புத்தன்மை குறித்து யார் கருத்து கூறினாலும், மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிடுகிறது. அதற்கு சமீபத்திய உதாரணங்கள் அமீர்கானும், ஷாருக்கானும். இந்நிலையில், சர்ச்சைகளை விட்டு விலகியே இருக்கும் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் மதசகிப்புத்தன்மையின்மை குறித்து தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
கோவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் போது ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “ஈரானிய படமான ‘முகம்மது மெஸேஞ்சர் ஆப் காட்’ திரைப்படத்துக்கு இசை அமைத்ததற்காக எனக்கு எதிராக பத்வா கொடுக்கப்பட்டது. இதன் மூலம் நானும் மதசகிப்புத்தன்மையின்மை பிரச்சனையை எதிர்கொள்ள நேர்ந்தது. நாகரிக மக்களாகிய நாம், சிறந்த குடிமக்கள் என்பதை உலகுக்கு காண்பிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவரிடம் விருதுகளை திருப்பிக் கொடுப்பது பற்றி கேள்வி எழுப்புகையில், “மகாத்மா காந்தி மண்ணில் நாம் இருந்து வருகிறோம். அதனால் எந்த ஒரு எதிர்ப்பும் செம்மையாக இருக்கவேண்டும். கேள்விமுறை இன்றி புரட்சி செய்யவது பற்றி நமக்கு உணர்த்தியவர் அவர்தான்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனினு அவர், விருதுகளை திருப்பிக் கொடுக்கலாமா? வேண்டாமா என்பது குறித்து நேரடியான பதிலை கூறவில்லை.