Home Featured நாடு மஇகா: “1800 கிளைகள் வேட்புமனுத் தாக்கலில் பங்கேற்காது” சோதிநாதன்! – “எங்கே அந்த 1800 கிளைகள்?...

மஇகா: “1800 கிளைகள் வேட்புமனுத் தாக்கலில் பங்கேற்காது” சோதிநாதன்! – “எங்கே அந்த 1800 கிளைகள்? காட்ட முடியுமா?” டி.மோகன் கேள்வி!

1021
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று நடைபெற்ற பழனிவேல் தரப்பின் மத்திய செயலவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அந்தத் தரப்பின் தலைமைச் செயலாளரான  டத்தோ சோதிநாதன் (படம்) “எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் மஇகாவுக்கு வெளியே இருக்கும் கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கலில் எங்கள் தரப்பிலான 1,800 கிளைகள் பங்கேற்காது” என அறிவித்திருந்தார்.

Dato S.Sothinathanஇதனைத் தொடர்ந்து மஇகாவுக்கு வெளியே இருக்கும் கிளைகளின் எண்ணிக்கை உண்மையிலேயே 1,800 தானா என்ற சந்தேகக் கேள்விகள் மஇகா வட்டாரத்தில் எழுப்பப்பட்டு வந்தன.

சோதிநாதனுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இன்று மஇகாவின் தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் விடுத்த அறிக்கையொன்றில் “எங்கே இருக்கின்றன அந்த 1,800 மஇகா கிளைகள்? அவற்றை சோதிநாதன் பட்டியலிட்டுக் காட்ட முடியுமா?” என்று சவால் விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

“மஇகாவில் அனைவரும் ஒன்றுபட்டு சமுதாயத்தை வலுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகையில் குறிப்பிட்ட சிலர் தங்களின் சுயநல அரசியலுக்காக மீண்டும் மீண்டும் குழப்பங்களை நீடிக்க செய்து வருகிறார்கள். இவர்கள் குறிப்பிடுவது போல 1800 கிளைகள் எங்கே? பட்டியலிட்டு காட்ட முடியுமா?” என டி.மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Mohan T“மஇகாவின் கிளைகள் தொடர்பில் சங்கங்களின் பதிவிலாகா ஆவணங்களின் படி அதிகாரபூர்வமானவை கிட்டத்தட்ட 3900 கிளைகள் மட்டுமே, அதிலும் 500 கிளைகள் காலவதியானவை. அந்த கிளைகளின் பிரச்சனைகள் தொடர்பில் இன்றைய நிலையில் 200 கிளைகள் சரிசெய்யப்பட்டு வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2013 தேர்தல் தொடர்பில் புதிதாக 200 கிளைகள் போடப்பட்டதை ஒப்பிட்டு பார்க்கையில்   3400 கிளைகள் இருந்தன. அதுமட்டுமில்லாது இந்த 3400 கிளைகளில் கிட்டதட்ட 100 கிளைகளுக்கு மேல்   சந்தாப்பணம் கட்டாததன் தொடர்பில் அந்த கிளைகளிலும்  பிரச்சனைகள் இருக்கின்றன. 100 கிளைகளுக்கு மேல் தலைவர்கள் இல்லாமல் அதன் உறுப்பினர்கள் வேட்புமனு செய்த நிலைப்பாடும் இங்கே நிலவுகிறது” என்றும் மோகன் (படம்) தனது அறிக்கையின் வழி விளக்கியுள்ளார்.

“இப்படிப்பட்ட சூழலில் எப்படி   பார்த்தாலும் அதிகபட்சமாக  800 கிளைகள் மட்டுமே மஇகாவிற்கு வெளியே இருக்கின்றன. 1800 கிளைகள் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல். இந்த தகவலை சொல்லும் தரப்பினர் அதனை நிரூபிக்க முடியுமா? வெறுமனே பத்திரிக்கை வழி அறிக்கை வெளியிட்டு கட்சிக்குள் மீண்டும் குழப்பத்தை நீடிக்க செய்வதை சம்பந்தப்பட்ட தரப்பினர் சமுதாய நலன் கருதி நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றும் மோகன் அறிவுறுத்தினார்.

MIC-logo“கட்சியின் மேம்பாடும், சமுதாய நலனும் நமக்கு மிக முக்கியம். அதனை தொடர்ந்தே மத்தியசெயற்குழுவில் ஏகமனதாக பேசி கட்சிக்கு வெளியே இருக்கின்ற கிளைகளை இணைத்து ஒன்றுபட்டு செயல்பட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, இதனையடுத்து வருகின்ற 19 ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்து கட்சிக்குள் இணைந்து பணியாற்றுங்கள்” என்றும் மோகன் வேண்டுகோள் விடுத்தார்.

“மஇகாவில் காலம் காலமாக சேவையாற்றி வந்த கிளைத் தலைவர்கள், தொகுதித்தலைவர்கள் சிலரின் அரசியல் சுயநலத்திற்காக அவர்களின் பேச்சைக்கேட்டு தங்களது கிளைகளை இழந்து, தொகுதியை இழந்து, பல பிரச்சனைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். மீண்டும் மீண்டும் அவர்களின் பேச்சை நம்பி கட்சியில் தங்களது பங்களிப்பை இழந்து விட வேண்டாம்” என்றும் அந்தக் கிளைத் தலைவர்களை மோகன் கேட்டுக் கொண்டார்.

“நாம் அனைவரும் நட்பின் அடிப்படையில் ஒன்றுபடுவோம் என கட்சியின்  தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம்  தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாது அனைவரையும் ஒன்றிணைக்கும் வேலைகளும் நடந்து வருகின்றது. இனியும் நமக்குள் அரசியல் நடத்தி கொண்டிருப்பது நல்லதல்ல. கட்சியில் இணையும் தரப்பினரை முழுமனதோடு வரவேற்கிறோம். கட்சிக்குள் பிரச்சனைகளைத் தொடர்வதை நிறுத்தி விட்டு சமுதாயத்தை கவனிக்கும் பணிகளை தொடர்வோம்” என்றும் டி.மோகன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.