Home Featured நாடு தெங்கு அட்னான் முன்னிலையில் சுப்ரா-பழனிவேல் தரப்பினர் பேச்சு வார்த்தை! நடந்தது என்ன?

தெங்கு அட்னான் முன்னிலையில் சுப்ரா-பழனிவேல் தரப்பினர் பேச்சு வார்த்தை! நடந்தது என்ன?

1003
0
SHARE
Ad

tengkuகோலாலம்பூர் – நேற்று காலை அம்னோ தலைமையகக் கட்டிடத்தில் தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் (படம்) முன்னிலையில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தரப்பினரும், பழனிவேல் தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

டாக்டர் சுப்ரா தரப்பில் அவரும், மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணியும், உதவித் தலைவர் டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரனும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

பழனிவேல் தரப்பைப் பிரதிநிதித்து, டத்தோ எஸ்.சோதிநாதன், டான்ஸ்ரீ எஸ்,பாலகிருஷ்ணன், முன்னாள் தகவல் பிரிவுத் தலைவர் சிவசுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்தப் பேச்சு வார்த்தை குறித்த முழுவிவரங்கள் இதுவரையில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

பேச்சு வார்த்தைக்குப் பின்னர் பழனிவேல் தரப்பினரின் கிளைகளின் தலைவர்களுக்கு, பிற்பகலில் விளக்கங்கள் அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சிக்கு வெளியே இருக்கும், மஇகா கிளைகளுக்கு, இறுதி வாய்ப்பாக எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதியை வேட்புமனுத் தாக்கல் நாள் என மஇகா மத்திய செயலவை நிர்ணயித்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பல மஇகா கிளைகள் மீண்டும் கட்சிக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில்,  தங்கள் தரப்பில் இருக்கும் 1,800 மஇகா கிளைகள் இந்த வேட்புமனுத் தாக்கலில் பங்கேற்க மாட்டார்கள் என டத்தோ சோதிநாதன் அறிவித்திருந்தார்.

ஆனால், இதற்கு பதிலளித்துள்ள மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் “எங்கே இருக்கின்றன அந்த 1,800 மஇகா கிளைகள்? பட்டியலிட்டுக் காட்ட முடியுமா?” என சோதிநாதனுக்கு சவால் விட்டுள்ளார்.

இன்றைக்கு கட்சிக்கு வெளியே இருக்கும் மஇகா கிளைகள், சங்கப் பதிவக ஆவணங்களின்படி, அதிகபட்சமாக 800 மட்டுமே இருக்கும் எனவும் டி.மோகன் கூறியுள்ளார்.